வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து, காண்டாமிருகமுன்னு பேர் வெச்ச கதையாக......தேசத்தை ஆளும் கட்சியான பா.ஜ.க. சொல்லிடுச்சே என்பதற்காக அ.தி.மு.க.வின் கூட்டணியில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல்,  22 தொகுதி சட்டசபை தேர்தல், வேலூர் லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் செம்ம அடி வாங்கியிருந்தாலும் கூட, இம்மாம் பெரிய கூட்டணி சாதித்தது என்னவோ விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் மட்டுமே. அதிலும், அந்த வெற்றிக்கு காரணம் நாங்களே! என்று அந்த கூட்டணியிலிருக்கும் ஒவ்வொரு கட்சியுமே சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இதில், அக்கூட்டணியின் தலைவனான அ.தி.மு.க.வுக்கு செம்ம கடுப்பு. ஆனாலும் வேறு வழியில்லாமல் அரவணைத்துச் செல்கிறது இவர்களை. 

இந்த பஞ்சாயத்து போதாதென்று, சமீபகாலமாக இந்த  கூட்டணிக்குள் இன்னொரு பிரச்னை வெடித்துள்ளது. அது என்னவென்றால், எதிர்வரும் தேர்தலிலும் அ.தி.மு.க. வெல்லும், ஆட்சியை மீண்டும் இ.பி.எஸ். கைகளில் கொடுப்போம்! என்கின்றனர் அமைச்சர்கள். அதேவேளையில் பா.ஜ.க.வோ, ‘தாமரை மலர்வது உறுதி. தமிழகத்தின் விடியல் பா.ஜ.க.வின் ஆட்சியில்தான்.’ என்கிறது. இது போதாதென்று அன்புமணியோ ‘தமிழகத்தில் நிச்சயம் பா.ம.க.வின் ஆட்சி அமையும். அதற்கான மந்திரம் என்னிடம் உள்ளது!’ ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். இவர்கள் மூவரும் சொல்லிவிட்ட பிறகு தே.மு.தி.க. சும்மா இருக்குமா, ‘கேப்டன் தமிழகத்தின் முதல்வராவது உறுதி’ என்று அவர்களும்முரசுகொட்டிவிட்டனர். 

ஒரு கூட்டணியின் ஒவ்வொரு கட்சியினரும் தாங்களே ஆட்சியமைக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை விட அக்கூட்டணியை கழுவி ஊற்றுவதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்? இப்படியாக அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணி, மெகாவாக அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நடக்குமா அல்லது நடக்காதா?ன்னு தெரியாமலிருக்கும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு பூகம்பமே உருவாகி இருக்கிறது! என்கிறார்கள். அதாவது உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு அறுபது சதவீத பதவிகளை எடுத்துக் கொள்ள இருக்கும் அ.தி.மு.க., மீதி நாற்பது சதவீதத்தை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் திட்டத்தில் உள்ளது. அந்த நாற்பதில், பா.ம.க.வுக்கு பதினெட்டு சதவீதமும், தே.மு.தி.க.வுக்கு பனிரெண்டு சதவீதமும் தரப்படும்! என்று ஒரு தகவல் வெளியாகிவிட்டது. 

இதைக் கேட்டு கடுப்பின் உச்சத்துக்கு போயிருக்கிறது தே.மு.தி.க. அக்கட்சியின் இளைஞர்கள் சிலர் இப்போதே இதை விமர்சித்து இணையதளங்களில் கருத்துக்களை போஸ்ட் செய்ய துவங்கிவிட்டதுதான் பஞ்சாயத்தே. ‘பா.ம.க.வுக்கு எதுக்குங்க பதினெட்டு சதவீதம்? ராமதாஸ் அப்படி என்ன பெருசா சாதிச்சுட்டார், எங்க கேப்டன் தனி மனுஷனாக கட்சியை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கொண்டு போனார், அ.தி.மு.க.வை 2011ல் அரியணையில் அமர்த்தினார். அவரை விட பெரிய அப்பாடக்கரா டாக்டர்? எங்க கட்சிக்கு தமிழ்நாடு முழுக்க செல்வாக்கு இருக்குது. ஆனால், வடதமிழ்நாட்டுல ஆறேழு மாவட்டம் தாண்டி மத்த இடங்கள்ள பா.ம.க.ன்னா கிலோ என்ன விலை?ன்னு கேட்பாங்க மக்கள்! அவங்களுக்கு ஏன் பதினெட்டு சதவீதம் பதவிகள்?” என்று கேட்டு, ராமதாஸோடு, எடப்பாடியாரையும் கடுப்பேற்றி வருகின்றனர். 
ஆஹா அச்சரா ஆரம்பமாகிடுச்சா!?