இந்தியாவில் அரசியல் பழிவாங்குதல் என்பது சட்டத்தை விட வலிமையாக உள்ளது என சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு பின்னே போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நிற்கும் நிலையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அரசியல் பழிவாங்குதல் என்பது இந்த நாட்டில் சட்டத்தை விட வலிமையாக உள்ளது' என்று கூறுகிறார். 

முன்னதாக ஊடகங்களை சந்தித்து உண்மையை வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று சிவக்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. சிவக்குமாரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரை செப்டம்பர் 13-ம்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

 

கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் கணக்கில் வராத ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ கஸ்டடியில் இருக்கிறார். கடந்த 21-ம்தேதி கைதான அவரை இன்று வரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரசின் முக்கிய தலைவராக இருக்கும் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.