சமீபத்தில் பல்வேறு நகரங்களில் நடந்த ராமநவமி ஊர்வலங்களின்போது வெறுப்புப் பேச்சுக்களால்தான் வகுப்புவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் ஆயுதங்களாக இருந்துள்ளன. வெறுப்பு பேச்சை பரப்ப சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதும் கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் வெறுப்பு பேச்சைத் தூண்டுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 13 தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

13 கட்சிகள் கூட்டறிக்கை

நாட்டில் அண்மைக் காலமாக குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளும் வன்முறையும் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் அப்போது தங்கள் கருத்துகளை கூறி வருகின்றன. இந்நிலையில் 13 கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து இதுதொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கூட்டறிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆர்.ஜே.டி. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

வெறுப்புப் பேச்சு

அந்த அறிக்கையில், “ நாட்டில் உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழியைப் பயன்படுத்தி ஒரு பிரிவினர் தொடர்ந்து பிரச்சினையைத் தூண்டுகின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தியாவில் வெறுப்பு பேச்சைத் தூண்டுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மதவெறியைப் பிரசாரம் செய்பவர்களுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி பேசத் தவறிவிட்டார்.

பிரதமரின் மெளனம்

இதுபோன்ற ஆயுதம் ஏந்திய கும்பல் அரசின் அனுகூலனைப் பெற்றிருப்பதும் பிரதமரின் மௌனமும் ஒரு தெளிவான சாட்சியமாகும். நம்முடைய நாடு அதன் பல பன்முகத்தன்மைகளை முழுமையாக மதித்து, இடமளித்து, கொண்டாடினால் மட்டுமே அது செழிக்கும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் குறித்து நாங்கள் அனைவரும் மிகக் கவலைப்படுகிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அர்த்தமுள்ள மற்றும் வலுவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும்.

ஒன்றிணைந்து செயல்படுவோம்

சமீபத்தில் பல்வேறு நகரங்களில் நடந்த ராமநவமி ஊர்வலங்களின்போது வெறுப்புப் பேச்சுக்களால்தான் வகுப்புவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் ஆயுதங்களாக இருந்துள்ளன. வெறுப்பு பேச்சை பரப்ப சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதும் கவலை அளிப்பதாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவை வளப்படுத்திய சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத ரீதியாகப் பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அமைதி காக்க வேண்டும்." என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.