Divakaran announces new party name
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் உடனான மோதலைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக் கட்சியை அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கும், திவாகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த
நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி அதற்கான அலுவலகத்தை சசிகலா படத்துடன் திறந்தார்.

இந்த நிலையில், இன்று மன்னார்குடியில் அம்மா அணி இனிமேல், அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியாக செயல்படும் என அறிவித்தார். அதன் பின்னர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கட்சி கொடியை எங்கள் நிர்வாகிகள் ஏற்றியுள்ளதாகவும், மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியலையும் அப்போது அறிவித்தார்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடியில் உள்ள நிறமான சிகப்பு மனிதனின் ரத்தத்தால் அனைவரும் சமம் எனக் குறிப்பதோடு மனிதனின் வலிமையைக் குறிக்கிறது. வெள்ளை சமாதானம் மற்றும் அறிவைக் குறிக்கிறது. கொடியின் நடுவே உள்ள ஸ்டார், துருவநட்சத்திரம் போல் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நினைவில் வரும் திராவிட தலைவர்களைக் குறிப்பதாகும். எங்கள் கட்சியில் திருநங்கைகளுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொறுப்புகள் கொடுக்கப்படும் இது அகில இந்திய அளவில் எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்று. மேலும் சுற்று சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவோம் என்றார் திவாகரன்.
அண்ணா திராவிடர் கழகத்தின் பொது செயலாளராக செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்
