Divakaran and Sasikala More trouble and assignment for TTV Dinakaran

அ.தி.மு.க. இரண்டாக பிளக்க காரணமே சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்தான். பிளந்த அணிகள் இன்னும் ஒட்டாமலிருக்கவும் இதுதான் காரணம். தினகரனையும் சசிகலாவையும் இன்னமும் எடப்பாடி கோஷ்டி முழுமையாக சசிகலாவையும், தினகரனையும் தூக்கி வீசிவிடவில்லை என்பதை முக்கிய காரணமாக சொல்லித்தான் அவர்களோடு ஒட்ட மறுக்கிறது பன்னீர் அணி.

சூழல் ஏற்கனவே இப்படியிருக்கும் நிலையில், மன்னார்குடி குடும்பத்திலிருந்து இன்னொரு கேரக்டரும் களமிறங்கியிருக்கிறது. அதுதான் திவாகரன். சசிகலாவை பெங்களூருவில் பரப்பன அக்ரஹார சிறையில் தினகரன் தன் மனைவியோடு சந்தித்த அதேநாளில் திவாகரனும் சசிகலாவை சந்தித்திருக்கிறார். சொல்லப்போனால் தினகரனுக்கு சற்று முன்னதாகவே இவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. 

தினகரன் சசியிடம் என்ன சொல்ல வந்தாரோ அவற்றில் முக்கால்வாசியை திவாகரன் அதற்கு முன்பாகவே சசியிடம் ஒப்பித்து முடித்துவிட்டாராம். கூடவே சசியும் அவருக்கு சில அஸைன்மெண்டுகளை வழங்கி முடித்துவிட்டார். இந்நிலையில் தன் மனைவி அனுராதாவோடு சசியை சந்தித்திருக்கிறார் தினகரன். அங்கே திவாகரனும் இருப்பதை கண்டு மிஸ்டர் கூலுக்கு செம அதிர்ச்சி. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சித்தியிடம் தகவல்களை கொட்ட ஆரம்பித்திருக்கிறார். 

ஆனால் ‘எல்லாம் தெரியும். மாமா (திவாகரன்) சொல்லிட்டாரு’ என்றவர் அங்கே வைத்தே தினகரனுக்கும் சில அஸைன்மெண்டுகளை கொடுத்துவிட்டு ‘கொஞ்சம் அமைதியாவே செயல்படு. வேகம் வேண்டாம்.’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இதற்கு ஓ.கே. சொல்லிவிட்டு வெளியே வந்த தினகரன் பெங்களூருவில் மீடியாவிடம் ‘60 நாட்கள் காத்திருந்து கவனிக்கப்போகிறேன். இரு அணிகளும் இணையாவிட்டால் அதன் பிறகு முடிவுகளை எடுப்பேன்.’ என்றார். 

துணைப்பொதுச்செயலாளரான தனக்குதான் அஸைன்மெண்டுகளை கொடுத்திருக்கிறார் சசி என்று நினைத்தபடி தினகரன் சென்னை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சசியை சந்தித்துவிட்டு வெளியே வந்த திவாகரன் கட்சி வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம். இதை தினகரனின் ஸ்பை டீமான தங்கம், வெற்றி, இன்பம் போன்றவர்கள் ஸ்மெல் செய்து தினகரனை அலர்ட் செய்திருக்கிறார்கள். 

அதைக்கேட்டு பி.பி. சற்று எகிறியிருக்கிறது தினகரனுக்கு. அதன்பிறகே தனி ரூட்டை மளமளவென போட ஆரம்பித்திருக்கிறார். சென்னை வந்ததும் தன்னை தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக வந்து சந்திக்க வேண்டும், இதன் மூலம் எடப்பாடி அணிக்கு அல்ல, பன்னீர் அணிக்கு அல்ல, திவாகரனுக்கு நடுக்கம் வரவேண்டும் என்பதே தினகரனின் இலக்கு. 

சென்னை வந்த தினகரனை அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க ஆரம்பித்து ஆட்சியே கலைந்துவிடுமோ என்று கலக்கம் பிடிக்குமளவுக்கு உருவான பூகம்பம் திவாகரனை செமத்தியாக ஆட்டிவிட்டது. இதைத்தான் தினகரனும் எதிர்பார்த்தார். ஆக மிஸ்டர் கூல் நினைத்தபடியே எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இதற்கு மாற்று ரூட் கண்டுபிடித்த திவாகரன் எடப்பாடி அண்ட்கோவிடம் பேசியதுடன், தினகரனின் சேட்டையால் ஆட்சி கலையும் சூழல் வந்தால் பன்னீர் டீமை கொண்டு அதை காப்பாற்றுவதற்கான மூவ்களை உருவாக்கினார். கொஞ்சம் கூட யோசிக்காமல் இறங்கிவந்து எடப்பாடி, பன்னீர் இரு தரப்பிலும் பேசி முடித்துவிட்டார் திவாகரன். தங்கள் குடும்பத்தை சுத்தமாகவே ஆகாத பன்னீரிடம் ‘என்னை சசிகலாவின் தம்பியா நினைக்காதீங்க. இந்த கட்சியை காப்பாத்த நினைக்கிற ஒரு உண்மை தொண்டனா மட்டும் நினையுங்க.

பழைய பிரச்னைகளை இப்ப பேசிட்டு இருக்க வேண்டாம். ஆகுறதை மட்டும் பார்ப்போம்.’ என்று ரொம்ப யதார்த்தமாக பேசினாராம். இதன் விளைவாகவே ‘அம்மாவின் ஆட்சி கவிழ விடமாட்டோம்.’ என்று பன்னீரின் தரப்பிலிருந்து சிலர் எடப்பாடி நிம்மதியடையும் விதமாக வார்த்தைகளை படரவிட்டனர். ஆக இதற்கு பின்புலமே திவாகரன் தான். 

இதன் மூலம் ஆட்சி பாதுகாப்பாக இருக்கிறது என்று எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர் குலாம் நிம்மதியில் மிதக்கும் விஷயத்தை உற்று நோக்கும் தினகரன் இதற்கு செக் வைக்கும் அடுத்த மூவ்களை துவக்கிவிட்டார். இன்னும் இரண்டொரு நாளில் அந்த ஷாக் அட்டாக்குகள் ஒவ்வொன்றாக வரிசைகட்டும் என்கிறார்கள். 

இதுதான் அ.தி.மு.க.வில் நிலவுகின்ற தற்போதைய சூழல். இதன் படி பார்த்தால் தினகரனுக்கு ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என்று இரண்டு எதிரிகள் மட்டும் இல்லை அது போக தனது சித்தி மற்றும் தாய்மாமா இருவரும் சேர்ந்த அணி ஒன்றும் இருக்கிறது. 

தினகரன் இந்த லாபிகளை எப்படி காலி செய்வார் என்று பார்ப்போம்!