18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு, தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற 17 எம்.எல்.ஏக்கள் சார்பில்(தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து) தொடரப்பட்ட வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது. 

அப்போது, சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேநேரத்தில் மற்றொரு நீதிபதியான சுந்தர், தலைமை நீதிபதியின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்ததோடு, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். 

ஒரே அமர்வில் இருந்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கின் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். 

கடந்த ஜனவரி மாதமே இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், ஜூன் மாதம் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நடவடிக்கை என தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறுவதிலும் மூன்றாவது நீதிபதி விமலா மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 17 பேர் சார்பாக(தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதில் நம்பிக்கையில்லை. அரசு அதிகாரிகளும் நீதிமன்றமும் இணைந்து இந்த வழக்கை தாமதப்படுத்துவதாக கருதுகிறோம். அதனால் விசாரணையின் மீது நம்பிக்கையில்லை. மூன்றாவது நீதிபதி விமலா விசாரிப்பதிலும் நம்பிக்கையில்லை. எனவே வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால், வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள், தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை மறுதினம்(ஜூன் 27) விசாரிப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு 17 எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. அவர் இதுதொடர்பான தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.