கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாதம் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்;- ஊரடங்கு நீட்டித்து இருக்கின்ற நிலையில், தற்போது எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் உடனடித் தீர்வு கண்டாக வேண்டும். வளைகுடா நாடுகளில் 2 கோடிக்கும் கூடுதலான இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அங்கே கொரோனா தாக்கத்தால், நமக்கும் முன்பாகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்றுவரையிலும் எல்லோரும் முடங்கி இருக்கின்றார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகளில் சேர்க்க இடம் இல்லை. எனவே, வீட்டிலேயே வைத்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகின்றார்கள். அப்படிப் பல தொழிலாளர்கள் தங்களுடைய இருப்பிடங்களிலேயே இருக்கின்றார்கள். இதனால், மற்ற தொழிலாளர்களுக்கும் தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள்.

குவைத் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்கள் குழுவை, இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் மருத்துவர்கள் குழுவை அனுப்ப வேண்டும். அயல்நாடுகளுக்கு சுற்றுலா சென்ற பயணிகள், நாடு திரும்ப முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த குறுகிய கால விசா முடிந்து போனதால், கூடுதலாகத் தங்கி இருக்கின்ற நாட்களுக்கு,, அந்த நாட்டுச் சட்டங்களின்படி, ஒவ்வொரு நாளும் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அபராதத் தொகை, ஒரு நாளைக்கு, 2000 ரூபாய்க்கு மேல் ஆகின்றது. ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்திற்கு 50000 ஆயிரத்திற்கு மேல் கட்டினால்தான், அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகையைக் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

நாடு முழுமையும் பொருட்கள் ஏற்றப்பட்ட 3.5 இலட்சம் சரக்கு லாரிகள், ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. அன்றாடத் தேவைப் பொருட்கள் இருப்பு தீர்ந்து விட்டதால், சரக்கு லாரிகளை இயக்குவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கடன்களைக் கட்ட, தவணை நீட்டிப்பை மத்திய அரசு அறிவித்தபோதிலும், தனியார் வங்கிகள் அதைப் பொருட்படுத்தாமல், மாதத் தவணையைப் பிடித்தம் செய்து கொண்டார்கள். கொரோனா காலத்திற்கான வட்டித் தள்ளுபடி குறித்து, மத்திய அரசு உரிய அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், தொழில்களை இயக்குவதற்கு அரசு பெருந்தொகையை நிதி உதவியாக அறிவித்து உள்ளன. அதுபோல, தமிழ்நாட்டில், தொழில்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மின் கட்டணம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அன்றாட உணவுக்கும் உறுதி இல்லை. எனவே, தொழிற்சாலைகள், வீடுகள் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நாட்டுப்புறக் கிராமியக் கலைஞர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியங்களில் சில ஆயிரம் பேர்களே பதிவு பெற்று இருக்கின்றார்கள். அந்த வாரியங்களின் சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகை அவர்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கின்றது. ஆனால், இலட்சக்கணக்கான கலைஞர்கள் பதிவுபெறாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.