தன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திமுக பிரதிநிதிகளை ஊடுறவ விட்டுள்ளதை பிரசாந்த் கிஷோர் விரும்பவில்லை. இதில், ஏதோ சூழ்ச்சி இருப்பதாக நினைக்கும் அவருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளதாக கூறுகிறார்கள்.

திமுகவுடன் ஒப்பந்தம் போட்டது முதலே பி.கே டீமுக்கும் திமுக ஐடி விங்குக்கும் இடையே அவ்வளவாக அணுசரணை இல்லை. ஏதோ ஒரு வகையில் மனக்கசப்பும், சகிப்புத்தன்மையின்மையும், முட்டல்- மோதல்களுமாய் வெடித்து வந்தது. இந்நிலையில், அண்மையில், தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தியது.  அப்போது தி.மு.கவை சேர்ந்த எம்.பி ஒருவர் 'அ.தி.மு.க., - பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இணையாக தி.மு.க., - ஐ.டி., அணியின் செயல்பாடு இல்லை' என வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அதனை ஏற்றுக்க்கொள்ளாத தி.மு.க தலைவர் ஸ்டாலின், 'திமுக ஐ.டி., விங் சிறப்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டை மறுத்தார். 

திமுக ஐ.டி அணி மாநில செயலரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் செயல்படுகிறார். பிடிஆரின் குடும்பம், பாரம்பரியமாக ஆன்மிகத்தில் நாட்டமுள்ள குடும்பம். ஆகையால் ஆன்மிக அரசியல், மதம், ஜாதி போன்றவைக்கு எதிரான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை எனக் குறைகூறி வருகிறார்கள். 

ஆனால், சென்னையை சேர்ந்த தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவரின் வாரிசும் ஐ.டி., அணி மாநில நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அவர் கந்த சஷ்டி கவசத்துக்கு எதிராக வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் தி.மு.க., மீது இந்துக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகி உள்ளதால் அதனை சமாளிப்பதற்கு ஆடிப்பெருக்கு, கிருஷ்ண ஜெயந்திக்கு தி.மு.க சார்பாக போச்டர்கள் ஒட்டப்பட்டன. கறுப்பர் கூட்டத்தால் தி.மு.கவிற்கு ஏற்பட்ட அதிருப்தியை களைவதற்கு, ஆன்மிகத்திற்கு, தி.மு.க., முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அக்கட்சி தலைமைக்கு, பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து விசாரித்தால், ‘’தி.மு.க - ஐ.டி., அணியின் துணை செயலர்களாக பணியாற்றி வந்த கார்த்திக், அப்துல்லா ஆகிய இருவரும், ஐபேக் நிறுவனத்தின் சென்னை கிளை சிறப்பு பிரதிநிதிகளாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த இருவரும் தன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற நிர்பந்தப்படுத்தப்படுவதை பிரசாந்த் கிஷோர் விரும்பவில்லை. இதில், ஏதோ சூழ்ச்சி இருப்பதாக, அவர் நினைக்கிறார்.

அதனால், அந்த எம்.எல்.ஏ வாரிசு ஏற்பாடு செய்து கொடுத்த சென்னை, அண்ணா நகரில் இயங்கி வந்த ஐபேக் நிறுவனத்தின் அலுவலகம், தற்போது பூட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணத்தால் அலுவலகம் பூட்டப்பட்டதா?  எம்.எல்.ஏ., வாரிசுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நிலவும் பனிப்போரால் மூடப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகம் வலுவடைந்து உள்ளது. ஐபேக் நிறுவனத்திற்கு, தி.நகர், கிண்டி பகுதிகளில், புதிய அலுவலகம் தேடப்பட்டு வருகிறது’’ என்கிறார்கள் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள். இந்த மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறது ஐபேக்- திமுக தரப்பு.