எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோது நடிகர் பாக்கியராஜ் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் பாக்கியராஜை தனது வாரிசு என்றே அழைத்தார்.  அந்த அளவுக்கு எம்ஜிஆருடன் மிக நெருக்கமாக இருந்தார்.

துவக்கம் முதலே தன்னை  எம்ஜிஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா என்ற திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அதிமுகவில்  இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தார்.

பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். ஆனால் அது எதிர்பாத்த அளவு வெற்றி பெறவில்லை பின்னர், நாளடைவில் அவர் கட்சி கலைந்து போகவே மறைந்த முதலமைச்சர் கருணாநிதி  முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்.

தொடக்கத்தில் திமுகவில் சுறுசுறுப்பாக இருந்தார். பின்னர் திமுகவில் இருந்தும் அவர் விலகி எந்தக் கட்சியிலும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் பாக்கியராஜ் அதிமுகவில் இணைகிறார்.

அமைச்சர் தங்கமணி, இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாகவே பாக்கிய ராஜுடன் பேசி வந்தனர். இந்நிலையில் இன்னும் இரண்டொரு நாளில் பாக்கியராஜ் அதிமுகவில் இணைந்து உடனடியாக பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.