தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

திமுக, அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. 

திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு குறித்த 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துமுடிந்த பின்னரும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்சம் 30 தொகுதியாவது பெற வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதால், அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் போராடுகிறது. ஆனால் திமுக அதற்கு தயக்கம் காட்டுவதால் பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியிலிருந்து விலகி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது.  

இந்நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ், தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். அதைத்தாண்டி தொகுதிப் பங்கீடு தொடர்பான ஊகங்களுக்கோ, வதந்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.