அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வெங்கடேசன் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் அவ்வப்போது மேடை மற்றும் பொதுக்கூட்டங்களில் தனது உளறல் பேச்சால் சிரிக்க மறந்த மக்களையும் சிரிக்க வைத்துவிடுவார். நெட்சன்களுக்கு விரும்பும் அமைச்சராகவும் திண்டுக்கல் சீனிவாசன் இருந்து வருகிறார். சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ளது. இவரது மகன் வெங்கடேசன் திருமணமாகி மெங்கில்ஸ் ரோடு மென்டோன்சா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெங்கடேசன் வெளியூர் சென்றிருந்தார். இதனை அறிந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்று பீரோவில் இருந்த 50  சவரன் தங்க நகைகளும், 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக அமைச்சர் மகன் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர் மகன் வீட்டிலேயே கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.