'அ.தி.மு.கவிடம் கூட்டணி வைத்துவிட்டு  பத்து அம்சக்கோரிக்கைகளை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம் என்பது பேங்க் லாக்கரின் பத்து சாவியை பிரிச்சு இரண்டு கொள்ளக்கார்களிடம் ஐந்து ஐந்து கொடுத்தது மாதிரி ஓ.பி.எஸ். இடமும், இ.பி.எஸ். இடமும் கொடுத்திருப்பது திருடன் கையிலேயே சாவியை கொடுத்த மாதிரி இருக்கு இந்த டாக்டர் ராமதாசின் கூட்டணி’ என்கிறார் தி.மு.க.வின் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி.

தேர்தல் கூட்டணி குறித்து நிருபர்களிடம் பேசிய அவர்,’’பாராளுமன்ற தேர்தலுக்கு உண்மையான கூட்டணி அமைத்திருப்பது திராவிட முன்னேற்ற கழகம் தான். ஒவ்வொரு கட்சியினரையும் அன்போடும், பாசத்தோடும் அழைத்து, கொள்கையோடு கூட்டணி அமைத்திருக்கிறோம். ஆனால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மானங்கெட்ட கூட்டணி என்பது என்னுடைய கருத்து. அதற்கு என்ன காரணம் என்றால், அ.தி.மு.க.வை. விமர்சனம் செய்து புத்தகம்  வெளியிட்டது ராமதாஸ். அதுபோல் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று கூறி கவர்னரிடம்  அன்புமணி ராமதாஸ் புகார் கொடுத்தார். அதுபோல் அ.தி.மு.க. ஊழலை பற்றி பட்டியல் போட்டு புக் போட்ட ராமதாஸ் தற்போது அங்கு போய் கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அதை இந்த கட்சியில் உள்ள மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதைப் பற்றி சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறும். மத சார்பற்ற ஊழலற்ற ஆட்சி திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் தான் அமையப் போகிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் அ.தி.மு.க. கூட்டணி போகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். சிலந்தி உடனே கூடு கட்டும் பட்டுப்புழு மெதுவாகத்தான் கூடு கட்டும். ஆனால் சீக்கிரம் சிலந்தி கூட்டை ஒட்டடை அடித்து குப்பையில் கொட்டிவிடுவார்கள். சீக்கிரம் வளர்வது கற்றாழை, மெதுவாக வளர்வது தென்னைமரம். சீக்கிரம் வளரும் கற்றாழை யாருக்கும் உதவாது. மெதுவாக வளரும் தென்னைமரம் காலங்காலமாக வைத்து பூஜை செய்வார்கள். அதேபோல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த அ.தி.மு.க. கூட்டணி சிலந்தி வலை மாதிரியும், கற்றாழை மாதிரியும் தூக்கி குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் மெதுவாக வளர்ந்து தென்னைமரம் போல் காலம் காலமாக திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு பயன்படும். 

 டாக்டர் ராமதாஸ் இன்னொன்றும் கூட ஒன்று சொல்லியிருக்கிறார். பத்து அம்ச கோரிக்கையை கொடுத்திருக்கிறோம் என்று.  யார் யாரிடம் கோரிக்கை கொடுப்பது. பேங்க் லாக்கரின் பத்து சாவியை பிரிச்சு இரண்டு கொள்ளக்கார்களிடம் ஐந்து ஐந்து கொடுத்தது மாதிரி ஓ.பி.எஸ். இடமும், இ.பி.எஸ். இடமும் கொடுத்திருப்பது திருடன் கையிலேயே சாவியை கொடுத்த மாதிரி இருக்கு இந்த டாக்டர் ராமதாசின் கூட்டணி . அவர் சமூக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது’’ என்றார் லியோனி.