வாரி வாரி இறைத்தும் தோற்றது ஏன்? வாக்கு சதவிகிதம் குறிப்பிட்ட அளவுகூட வாங்காதது எப்படி? என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் தினகரன். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அபாரத் தோல்வியால், அமமுக கடுமையாக அதலபாதாளத்தில் விழுந்துக்கிடக்கிறது அமமுக, இந்த அபாரத் தோல்வியால் தினகரன் வேதனை அடைந்துள்ளார். இந்த தோல்வி வேதனை துரத்திக்கொண்டிருக்கும்போதே, கட்சியிலுள்ள முக்கிய புள்ளிகள் வேறு கட்சிகளுக்கு தாவுவதால் அமமுக மொத்த கூடாரமும் காலியாகியுள்ளது. 

இந்நிலையில்,  கடந்த ஜூன் 1 ஆம் தேதி தோல்விக்கான காரணங்கள் பற்றி கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து மாவட்ட ரீதியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அமமுகவினர் எதிர்பார்த்த நிலையில், அது தொடர்பான அறிவிப்புகள் உடனடியாக ஏதும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் ஆங்காங்கே அதிமுகவில் சேர்ந்து வரும் நிலையில், வரும் 22 ஆம் தேதி திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தை கூட்ட உள்ளதாக அறிவித்துள்ளார் தினகரன்.

திருச்சி வயலூர் மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் அமமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் வரை ஒவ்வொரு நிர்வாகியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அமமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டமானது, தேர்தல் தோல்விக்குப் பின் பொதுவாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எல்லா நிர்வாகிகளும், வேட்பாளர்களும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் தேர்தல் களம் தொடர்பாக அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது தினகரனிடம் அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பி வருகிறார்களாம். 

இந்நிலையில்தான், வாரி வாரி இறைத்தும் தோற்றது ஏன்? வாக்கு சதவிகிதம் குறிப்பிட்ட அளவுகூட இல்லாதது ஏன்? என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் தினகரன். தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் இருந்து ஆய்வைத் தொடங்குகிறார். வெறும் மாவட்ட நிர்வாகிகளை மட்டும் சந்திக்காமல் கிளை கழக நிர்வாகிகள் வரைக்கும் சந்தித்து கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மட்டும் நிர்வாகிகளின்  உணர்வுகளை அறிந்து அதற்கேற்ற போல நடவடிக்கை எடுக்க உள்ளாராம்  தினகரன்.

சில மாவட்டச் செயலாளர்கள் களையெடுப்புப் பட்டியலில் இருக்கின்றனர். ஆய்வுக் கூட்டங்கள் முடிந்த பின்னர் நிர்வாகிகளை நீக்கம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார் தினகரன். அவர்களில் சிலர் இப்போதே அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு தாவி வருகிறார்கள். தினகரனின் அந்த களையெடுப்பு  கூட்டங்களில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகளுக்கான அடையாள அட்டை தயாராகி வருகிறதாம்.