ஏஸியாநெட் தமிழ் இணையதளம் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ‘தினகரனின் மனைவி அனுராதா தீவிர அரசியலுக்கு வர இருக்கிறார். தனது கட்சியில் அதற்கான வேலைகளை அவர் துவங்கிவிட்டார்.’ என்பதுதான். அந்த தகவல் இதோ நிதர்சனமாகி இருக்கிறது. அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. சமீபத்தில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். 

தினாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணமாக “டி.டி.வி. - ஓ.பி.எஸ். சந்திப்பு விவகாரம் பற்றி ஒரு சேனலில் விவாதம் நடந்திருக்கிறது. அப்போது அதில் தேனி கர்ணனும் கலந்து கொண்டிருக்கிறார். விவாதம் முடிந்து சிவசங்கரி வீடு திரும்பியதும், அவருக்கு போன் போட்ட தினகரனின் உதவியாளர் ஜனாவும், தினகரனின் மனைவி அனுராதாவின் உதவியாளர் பிரபுவும் சிவசங்கரிக்கு போன் போட்டு ‘கர்ணன் ஒரு இடத்தில் இருக்கிறாரென்றால் நீங்கள் அங்கே இருக்க வேண்டிய அவசியமென்ன?’ என்று விசாரணை நடத்தியிருக்கின்றனர். 

அதற்கு சிவசங்கரி ‘நான் தைரியமாக விவாதிக்காமல் எழுந்து வந்திருந்தால் நம் கட்சிக்கு தானே அவமானம்?’ என்று கேட்டிருக்கிறார். ஆனாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். இந்நிலையில், வெளியே வந்திருக்கும் சிவசங்கரி “அ.ம.மு.க.வில் கிளை அளவில் ஆரம்பித்து அத்தனை பதவிகளையும் பணம் வாங்கிக் கொண்டுதான் வழங்குகின்றனர். இதில் அனுராதாவின் கலெக்‌ஷன் ஏஜெண்டுகளாக இருப்பவர்கள் ஜனாவும், பிரபுவும்தான். கட்சியில் பணம் கொடுக்காமல் பதவி பெற்றது நான் மட்டும்தான். இதை அனுராதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  

அனுராதா, பிரபு, ஜனா எனும் மூன்று தடைகளை தாண்டித்தான் தினகரனை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. இதையெல்லாம் என்னை வெளியேற்றியதால் சொல்லவில்லை, உண்மை இதுதான். அந்த கட்சியில ஒவ்வொரு மாவட்ட செயலாலௌம் 40, 50 லட்சங்களை செலவு பண்ணிட்டு நிற்கதியா நிக்குறாங்க. ஒன்றிய, நகர, அளவில் நிர்வாகிகளை நியமிக்குறதும், நீக்குறதும் அனுராதாவின் கையில்தான் இருக்குது. 

அ.ம.மு.க.வை பொறுத்தவரையில் அனுராதாவை தாண்டி தினகரனால் எதையும் செய்ய முடியாது.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். ஆனால், இதை கடுமையாக மறுக்கும் தினகரன் தரப்பு “அதென்ன எல்லா பதவிகளுமே பணம் வாங்கிக் கொண்டுதான் போடப்படுதுன்னா சிவசங்கரி மட்டும் பணம் கொடுக்காம பதவி வாங்கியது எப்படியாம்! கற்பனைக்கு ஒரு அளவில்லையா. வக்கீலான தன்னை ‘லஞ்சம் கொடுத்து பதவி வாங்கினீங்களா?’ன்னு யாரும் கேட்டுட கூடாதுன்னு லாவகமா கதை எழுதியிருக்கார். இவர் கிளப்புவது அத்தனையும் வதந்தி.” என்கிறார்கள்.