மோடியிடம் மண்டியிட்டுத் தோப்புக்கரணம் போடுபவர் எல்லாம் புரட்சிப் பெருந்தகையா? எம்ஜிஆரும் புரட்சித் தலைவி அம்மாவும் எங்களுக்கு புரட்சி என்ற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்று எடப்பாடியை கருமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், அதிமுகவை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தார் தினகரன். ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இதே அதிமுக தான் தினகரனுக்குப் பதவியைக் கொடுத்தது.

புரட்சித்தலைவி அம்மாவின் உழைப்புதான் அவருக்கு அடையாளம் கொடுத்தது. அவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகிய கட்சி அதிமுக. இரட்டை இலை சின்னம்தான் அவருக்கு வாழ்வையும், அடையாளத்தையும் கொடுத்தது. அந்த இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டுமென்று அவர் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார். 

பின்னர் சூலூர் பகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட  தினகரன் ஆளும் கட்சியை தாறுமாறாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர்; மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பட்டம் சூட்டியுள்ளனர். இதைக் கேட்டால் புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் புரட்சித் தலைவி அம்மாவும் எங்களுக்கு புரட்சி என்ற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் எனக் கூறினார். 

மேலும் பேசிய அவர், புரட்சி என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட வேண்டும்? மோடியிடம் மண்டியிட்டுத் தோப்புக்கரணம் போடுபவர் எல்லாம் புரட்சிப் பெருந்தகையா? என்று கேள்வியெழுப்பினார்.