dinakaran supporters removed from party posting
தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் 9 பேர் கட்சி பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் தினகரனிடம் படுதோல்வியை சந்தித்ததன் எதிரொலியாக, தினகரனின் ஆதரவு கட்சி நிர்வாகிகள் பலர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே புகழேந்தி, நாஞ்சில் சம்பத், கலைராஜன், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தினகரனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமியும் பன்னீர்செல்வமும், மேலும் 164 பேர் கட்சியின் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
இதையடுத்து தினகரனின் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகிகளை நீக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும், தைரியம் இருந்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கட்டும் என சவால் விடுத்தார்.
இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களான கோதண்டபாணி, கதிர்காமு, கலைச்செல்வன், ஜெயந்தி பத்மநாபன், மாரியப்பன் கென்னடி, முத்தையா, எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஆர்.சுந்தர்ராஜ், உமா மகேஸ்வரி ஆகியோரின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 9 பேரையும் கட்சி பொறுப்புகளிலுருந்து விடுவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
