நீதிமன்றத்தில் மறு பரிசீலனை மனு தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தில் சசிகலா வென்றால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். 

அமமுக பொதுச்செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் டி.டி.வி.தினகரன். அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதனை எதிர்த்துப் போராடும் விதமாக அமமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இது குறித்து பேசிய டி.டி.வி.தினகரன், ‘’
சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அமமுகவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படிதான் நான் அமமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.

சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். அமமுக துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை பின்னர் அறிவிப்போம். அதிமுகவை கைப்பற்ற சசிகலா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். சட்டபோராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்.

அமமுக கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாண பத்திரம் பெற்றுள்ளோம். அமமுகவை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக வருகிற 22-ந்தேதி மனு அளிக்க உள்ளோம்.

4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னத்தை கேட்டுள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றதால் தொண்டர்கள் தொடர்ந்து குக்கர் சின்னத்தை விரும்புகிறார்கள். அமமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 22-ம் தேதி வெளியிடப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்