தனது உயிருக்கு ஆபத்து இருப்பது உண்மை தான் என்று டி.டி.வி தினகரன் கூறியிருப்பது அவரது கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு வழங்கி வருவது வழக்கம். இவர்களின் வீடுகளில் ஷிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் டி.டி.வி தினகரன் வீட்டுக்கும் சரி அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் சரி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.

சசிகலா சிறை சென்ற பிறகு டி.டி.வி தினகரனுக்கு சில நாட்கள் போலீசார் பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஆனால் அவர் அ.தி.மு.கவில் ஓரங்கட்டப்பட்ட பிறகு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. டி.டி.வி தினகரன் வீட்டில் பாதுகாப்புக்கு என்று யாரும் தனியாக இல்லை. ஒரு வாட்ச்மேன், டிரைவர் சில உதவியாளர்கள் மட்டும் அங்கு எப்போதும் இருப்பார்கள்.

மன்னார்குடியைச் சேர்ந்த சிலர் சில நாட்கள் வரை தினகரன் வீட்டில் பாதுகாப்பிற்கு இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்களும் மன்னார்குடிக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் தினகரன் வீட்டின் முன்பு புல்லட் பரிமளம் கொண்டு வந்த பெட்ரோல் கேன் வெடித்து சிதறியது. இதனால் புல்லட் பரிமளம் மட்டும் அல்ல தினகரனின் கார் ஓட்டுனர் மற்றும் போட்டோகிராபர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புல்லட் பரிமளம் பெட்ரோல் கேனுடன் வீட்டிற்கு வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினகரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அவரது கட்சியை சேர்ந்த பழனியப்பன் உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தனது வீட்டின் முன்பு வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது பெட்ரோல் கேனா என்பதில் குழப்பம் நிலவுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் புல்லட் பரிமளத்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது உண்மை தான் என்று தினகரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தனது ஆதரவாளர்கள் தான் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்என்று மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் நான் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.