dinakaran retaliation to minister jayakumar opinion
எங்களை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமாரிடம் யாரும் கேட்கவில்லை என தினகரன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்றால், அந்த திட்டத்தை கைவிடுவதுதான் சரியாக இருக்கும். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது. முதல்வரின் சொந்த ஊர் சேலம் என்பதால், சென்னையிலிருந்து அவர் சேலத்திற்கு விரைவாக சென்று வருவதற்காகவே இந்த சாலை அமைக்கப்படுகிறது என மக்கள் கிண்டல் செய்கின்றனர் என தினகரன் விமர்சித்தார்.

அதிமுகவில் தினகரனையும் அவருடன் இருப்பவர்களையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து தொடர்பாக தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தினகரன், எங்களை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் யார் கேட்டது..? எனக்காக ஓட்டு கேட்ட இவர்கள், இன்று யாருக்கோ பயந்து இப்படி பேசுகிறார்கள். எங்களை கட்சியில் இணைத்துக்கொள்ள முடியாது என்று இன்றைக்கு கூறுபவர்கள், எதற்காக எனக்கு ஓட்டு கேட்டார்கள் என்று விளக்க வேண்டும்.

ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்தும் தோற்றுவிட்டார்கள். அதேபோலவே எதிர்காலத்திலும் தோல்விடைவார்கள். தற்போதைய ஆட்சியாளர்களை மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள் என தினகரன் விமர்சித்தார்.
