தமிழகத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு கூட்டணிகளை உறுதி செய்துகொண்டிருக்கும் நிலையில், அமமுக மட்டும் அமைதியாக இருந்துவந்தது. இதற்கிடையே 38 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்த தினகரன், வரும் 28ஆம் தேதி வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று சேலத்தில் 5வது நாளாக  மக்களைச் சந்தித்த தினகரன். அதிமுக பாமக கூட்டணியை தாறுமாறாக விமர்சித்துத் தள்ளியுள்ளார். 

அப்போது, “21 தொகுதிகளுக்கும் தற்போது இடைத் தேர்தல் வேண்டாம் என்று மத்திய பாஜக அரசிடம் அதிமுக கூறியுள்ளது. மக்களவைத் தேர்தலில் யாரும் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை. இடைத் தேர்தல் நடந்து ஆட்சி பறிபோகக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் எனவே இடைத் தேர்தல் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை என குறிப்பிட்டார்.

அம்மாவைக் கேவலமாக விமர்சித்தவர் ராமதாஸ். ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல எடப்பாடியையும், பன்னீர்செல்வத்தையும் ஒருமையில் விமர்சித்தவர் அன்புமணி. அம்மாவைக் கேவலமாகப் பேசியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளது அம்மாவின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று குற்றம்சாட்டிய தினகரன், ஒவ்வொரு தேர்தலுமே புதுக் கணக்குதான். அம்மா, கலைஞர் இல்லாத காரணத்தால் பழைய கால கணக்குகளைத் தற்போது கூற முடியாது. அதிமுகவின் மெகா கூட்டணி பண பலத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறது, திமுக தோழமைக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறது என்றும் விமர்சித்தார்.

மேலும், “பலமான கூட்டணி, பலமான கட்சி என்று சொல்பவர்களுக்கு டெபாசிட் போகிறதா, இல்லையா என்று பாருங்கள். அம்மாவின் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெற்று வருகிறது என்று கூறினார்கள். ஆனால் அதனை முறியடித்து நான் வெற்றி பெற்றேன். இதுபோலவே தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகராக மாறும். எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளேன் என  தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.