மறைந்த ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன் என்றும், தினகரன் அதிமுகவிலேயே இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

அதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை, நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்டவைகள் குறித்து, இம்மாதம் 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை ஓ.பி.எஸ். அணி அறிவித்தது.

ஓ.பன்னீர்செல்வம், தன் அணியை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ். ஈடுபட்டுள்ளார். மேலும், தனது ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வருமாறு பன்னீர்செல்வம் அழைப்பும் விடுத்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம்  ஆலோசனை நடைபெற்றது.

டிடிவி தினகரன், கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்திற்கு பிறகு கே.பி. முனுசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய நிர்வாகிகளை டிடிவி தினகரன் நியமித்ததால் எங்கள் அணியில் குழப்பம் இல்லை என்றார்.

தற்போது நடந்த கூட்டத்தின்போது, ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

டிடிவி தினகரன், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறிய கே.பி. முனுசாமி, தினகரன் அதிமுகவிலேயே இல்லை என்று கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்குள்ள என்றம் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.