தினகரன் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் கூடுவதாக அவரது கட்சியினர் அங்காலாய்த்து வரும் நிலையில் கூட்டம் எப்படி கூட்டப்படுகிறது என்பதற்கு சான்றாக வீடியோ வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகளை தினகரன் வழங்கி வருகிறார். 

இந்த கூட்டத்தில் எல்லாம் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்பதால் ஜகஜோதியாக காட்சி அளிக்கிறது. ஆனால் தினகரன் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாக அ.தி.மு.க அமைச்சர்கள் நேரடியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் தான் திருவாரூரில் தினகரன் நடத்திய கூட்டத்திற்கு எப்படி ஆள் சேர்த்தார்கள் என்கிற புகைப்பட ஆதாரம் வெளியானது. தினகரன் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரம் வழங்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. 

கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட, அந்த டோக்கன்களை பாத்திரக்கடைகளில் கொடுத்து பெண்கள் தங்களுக்கு தேவையான பாத்திரங்களை வாங்கிச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வேலூரில் கடந்த வாரம் தினகரன் பொதுக்கூட்டம்  நடத்தினார். அந்த மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் எவ்வளவோ முயன்றும் பெரிய அளவில் கூட்டத்தை கூட்ட முடியவில்லை. ஏராளமான சேர்கள் காலியாகவே கிடந்தன. 

இந்த நிலையில் கட்சிக்காரர்கள் வராத நிலையில் வேலூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர்களை 
நிர்வாகிகள் பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

சுமார் 50 வட மாநில இளைஞர்கள் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் சென்று ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்ட போது 300 ரூபாய் தந்தார்கள் அதனால் வந்து உட்கார்ந்து இருக்கிறோம் என்று பதில் கூறினார்கள். 

மேலும் வீடியோ எடுக்கப்படுவதை பார்த்ததும் அவர்களில் சிலர் முகத்தை மறைத்தனர். மேலும் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் அங்கு வந்து வீடியோ எடுக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர். இந்த வீடியோ 
இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.