dinakaran is very confident in his victory

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 80% வாக்குகள் பதிவானால், தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 258 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

 வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 7.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவருகிறது. 

பணப்பட்டுவாடா சர்ச்சையையெல்லாம் மீறி ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்குச்சாவடி ஒன்றை பார்வையிட்ட தினகரன், தேர்தல் ஆணையத்தின் மீது தங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும் இதுவரை தேர்தல் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆர்.கே.நகரில் 80% வாக்குகள் பதிவானால், அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தான் அபார வெற்றி பெறுவது உறுதி என தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பதாக தெரிவித்தார்.