Dinakaran is creating more trouble to ministers

ஒரு முழு நேர அரசியல்வாதிக்கான முக்கிய தகுதியை தினகரன் அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

நேற்று சொன்னதை இன்று மாற்றுவதும், நாளை சொல்லப்போகும் விஷயத்துக்கான மிக முரண்பட்ட ஸ்டேட்மெண்டை போன வாரமே சொல்லி வைத்திருப்பதுமென சூழலுக்கு சுகந்தமாக பேசுவதும், செயல்படுவதும் அரசியல்வாதிகளின் மிக முக்கிய தகுதி. அதை கனகச்சிதமாக பற்றிக் கொண்டிருக்கிறார் தினகரன். 

ஏப்ரல் 17-ம் தேதி ‘என்னால் இந்த கழகத்தின் வளர்ச்சிக்கு தடை என்றால், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பப்படி நான் கட்சியிலிருந்து விலகி நிற்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு சில நாட்கள் திகாருக்கு போய் திரும்பியவர், ’கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னை கட்சிப்பணியாற்ற அழைக்கிறார்கள்.

எனவே கழக வளர்ச்சியில் என்னை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளேன்.’ என்று ஜூன் 4-ம் தேதி மாற்றி அறிவித்து வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகிய மணிகளடங்கிய மணி அண்ட்கோவுக்கு மரண பீதியை கிளப்பினார். 

உடனே மணி அண்ட்கோ மீனவ நண்பர் ஜெயக்குமாரின் அறையில் பஞ்சாயத்தை கூட்டி ‘ஏம்பா நாம ஏற்கனவே தங்கமணி ரூம்ல வெச்சு முடிவெடுத்த மாதிரி ஆரும் அந்த தினகரன், சசிகலா கோஷ்டி கூட அன்னந்தண்ணி புழங்க கூடாது.

அவுங்க ரெண்டு பேரையும் கழகத்தில இருந்து தள்ளி வெச்சிருக்கோம். ஆரும் பெசண்ட் நகர் வூட்டாண்ட போவ கூடாது, ஆரும் பரப்பன அக்ரஹரா பக்கம் பறக்குற காட,கெளதாரிய கூட வறுத்து தின்னக்கூடாது. இத மீறி தொடர்பு வெச்சுக்கிட்டா அவங்களையும் கழகத்துல இருந்து கழட்டிவிட்டுடுவோம்.’ என்று பழைய தீர்ப்பை மறுபடியும் வாசித்தனர். 

பெங்களூரு போகும் வழியில் இதைக் கேள்விப்பட்ட தினகரன், எம்.ஜி.ரோடு பக்கமா சாயா குடிக்கையில் ’என்னை நீக்க பொதுச்செயலாளருக்குதான் அதிகாரமிருக்குது. கழக பொதுச்செயலாளரான என்னோட சித்திய பார்க்கத்தான் போறேன்.

என்னை தள்ளி வைக்க ஜெயக்குமார் யார்?’ என்று கடுப்பேறி தாளித்துவிட்டு கைதியை காண பெட்டிஷன் எழுதப்போனார். 

மிஸ்டர் கூல் ஆன தினகரனே இந்த ஆட்டம் ஆடுறார். இதுல டென்ஷன் பார்ட்டியான சசியை வேற சந்திச்சுட்டு வந்தார்னா என்னா ஆட்டம் ஆடுவார்?

இன்னிக்கு நமக்கு சுறா வேட்டைதான் மாமு! என்று பெங்களூரு மீடியாக்கள் சிறைக்கு வெளியே கேண்டீன் பக்கமாய் சிகரெட்டை பற்றவைத்தபடி குஷியானார்கள். 

சுமார் இரண்டு மணி நேரத்தில் வெளியே வந்த தினகரன் ‘பொதுச்செயலாளரிடம் சூழ்நிலையை விளக்கினேன். அவர் சில அறிவுரைகள் கொடுத்திருக்கிறார்.

அதன்படி இன்னும் 60 நாட்கள் காத்திருந்து நடப்பவற்றை கண்காணிக்கப்போகிறேன். பிரிந்த இரு அணிகளும் அதற்குள் இணையாவிட்டால் அதன் பின் அடுத்த முடிவெடுப்பேன்.’ என்று புஸ்வானம் ஒன்றை பற்றவைத்துவிட்டு கிளம்பினார். 

இந்த ஸ்டேட்மெண்டில் பிச்சுமணி அண்ட்கோ கொஞ்சம் அமைதியாகி, சந்தோஷமும்பட்டது. 

அடடா கைக்கு எட்டுன கைமா வடை இப்படி மவுத்துக்கு எட்டாம போச்சே, இன்னும் 60 நாள் வெயிட் பண்ணனுமா? என்று மீடியாக்கள் மண்டை காய்ந்த நேரத்தில் தனது அடுத்த ரவுண்டை துவக்கியிருக்கிறார் தினகரன். 

60 நாட்கள் காத்திருக்கப்போகிறேன்...என்று பெங்களூருவில் சொல்லிவிட்டு வந்த வார்த்தையின் ஈரம் கூட காயவில்லை, சென்னை வந்த ஜோரில் வரிசையாக தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க துவங்கினார்.

‘ரெண்டு மாசத்துக்கு தொந்தரவு இல்லடா சாமீ!’ என்றபடி லேசாக கண்ணை மூடிய அமைச்சர்களின் காதில் இந்த விவகாரம் பழுக்க காய்ச்சப்பட்ட ஈயமாக அவர்களின் பி.ஏ.க்களால் ஊற்றப்பட்டது. தலையிலடித்துக் கொண்டு தெறித்து எழுந்தார்கள். 

ஏதோ நாலு பேரை சந்தித்துவிட்டு நாஸ்தா சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார் என்று பார்த்தால், ரெண்டு மணி நிலவரப்படி, நாலு மணி நிலவரப்படி என்று மணிக்கு மணி எகிறிக் கொண்டே இருக்கிறது தினகரனின் ஆதரவு அவதாரம் எடுக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை. 

ஆட்சிக்கே ஆப்பு வைக்குமளவுக்கு ஆதரவாளர் எண்ணிக்கையுடன் விஸ்வரூபமெடுக்க துவங்கியிருக்கிறார் தினகரன். ’உங்களோட 60 நாள் விரதம் என்னாச்சு?’ என்று கேட்டபோது ‘ஆதரவாளர்கள் அன்பா பார்க்க வர்றதை எப்படி தடுக்குறது?’ என்கிறார் கூலாக.

அறுபது நாள் காத்திருப்பேன் என்றதெல்லாம் பெங்களூருல சொன்னது, ஆனா இதெல்லாம் எங்களூருல சொல்றது என்று சூழலுக்கு ஏற்ப தான் சொக்கட்டான் ஆடுவதை சொல்லாமல் சொல்லியடிக்கிறார். 

ஆக நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், மணிக்கு மணி மாற்றி பேசி தன்னுடைய ஸ்டேட்மெண்டுகளை தானே பொய்யாக்கிக் கொண்டிருக்கும் கலையில் கனகச்சிதமாக தேர்ந்துவிட்டதன் மூலம் முழு நேர அரசியல்வாதியாக பரிமளிக்கிறார்.

ஆக மொத்தத்தில் தினகரனின் டரியல் ஆரம்பம்!