அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 12ம் தேதி ஆர் கே நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத் தேர்தல், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால், ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கோரியது. ஆனால், தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கிவிட்டு, இரு அணிக்கும் மாற்று சின்னத்தை கொடுத்தது.

இதையொட்டி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு, டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சுகேஷ் சந்திரா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், டிடிவி.தினகரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து டெல்லி சென்ற அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று 3வத நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகியோரிடம் நடத்தும் விசாரணையின்போது, அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை நீடித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த விசாரணை இன்று மாலை 4 மணிக்கு டிடிவி.தினகரனிடமும், மதியம் 2 மணிக்கு மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இருக்கிறது.