ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தினகரன் மரியாதை செலுத்தினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஆட்சியாளர்கள், தொண்டர்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் அனுசரித்து வருகின்றனர்.

 ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் அண்ணாசாலையில் இருந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கட்சியின் ஏராளமான தொண்டர்கள் மெரினாவில் குவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதலே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவருகின்றனர்.

இந்நிலையில், தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை வழியாக தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணியாக வந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

தினகரனுடன் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தினகரனின் ஆதரவாளர்களை அனுமதிக்க போலீசார் மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.