Dinakaran Exclusive interview in leading news channel

அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது நெறியாளர், தினகரனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு தினகரன் சளைக்காமல் பதிலளித்தார்.

ஜெயா டிவி வரலாற்றில் முதல் முறையாக திமுகவைச் சேர்ந்த துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். இது குறித்து பதிலளித்த தினகரன், இதனை ஒளிபரப்ப வேண்டாம் என்று விவேக்கிடம் கூறியதாகவும், நான் ஒரு கட்சியின் நிர்வாகியாக கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், விவேக், துரைமுருகனின் பேட்டியை ஒளிபரப்பு செய்தார்.

மறைந்த ஜெயலலிதா, சசிகலாவுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று திவாகரன் கூறியது குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியதற்கு, திவாகரன் ஒரு சகோதரனாக சசிகலாவை பாதுகாப்பில்லாமல் ஜெயலலிதா விட்டுவிட்டு போய்விட்டார் என்ற ஆதங்கத்தில் கூறியிருப்பார் என்றும் இது குறித்து நான் பல முறை கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு என்ன பாதுகாப்பு என்பது குறித்து நீங்கள் கூறுகிறீர்கள் என்று தினகரனிடம் நெறியாளர் கேள்விக்கு, அது குறித்து நீங்கள் திவாகரனிடம்தான் கேட்க வேண்டும் என்றார் டிடிவி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது கணக்கில் வராத ஆயிரத்து 400 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறதே என்று நெறியாளர் கேள்விக்கு, இது அபிஷியலா சொல்லப்பட்டதா என்றார் டிடிவி. அதற்கு நெறியாளர் இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது என்றார்.

என் வீட்டில் பாதாள அறை உள்ளது என்று அனைத்து ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியது அது உண்மையா? தினகரன் வீட்டில் ரெய்டு என்று சொன்னீர்கள்... என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதா? என்று நெறியாளரைப் பார்த்து டிடிவி பதில் கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, திவாகரன், விவேக், வெங்கடேசன், சிவக்குமார் ஆகியோரிடம் பேசினேன். அதற்கு பிரச்சனை ஒன்றும் இல்லை என்று அவர்கள் கூறினர். 

28 வயது இளைஞர் ஒருவருக்கு இவ்வளவு கோடி சொத்து எப்படி வந்தது... இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு எப்படி அதிபதியானார் என்ற கேள்விக்கு, சேனலின் சிஇஓ எல்லாம் நிறுவனத்தில் ஓனராக இருப்பாரா என்றும் தினகரன் பதில் கேள்வி எழுப்பினார். அந்த சொத்துக்கு அவர்தான் ஓனர் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஜெயா டிவியில் விவேக்கிற்கு ஷேர் இருக்குன்னு நீங்க சொல்றீங்களா? என்று அடுக்கடுக்காக பதில் கேள்வி கேட்டார்.

நெறியாளரின் கேள்வியால் திணறியவர்களைத்தான் பார்த்த நிலையில், நெறியாளரையே திணறடித்த தினகரனின் பேட்டி சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது...