ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலா பெயர், படம் என அனைத்தையும் தினகரன் இருட்டடிப்பு செய்துவிட்டதால், அவரது குடும்பத்தினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில், சசிகலாவின் பெயரை மருந்துக்கு கூட உச்சரிக்காத தினகரன், மூச்சுக்கு முப்பது தடவை அம்மா.. அம்மா.. என்றே பேசிவருகிறார். 

சசிகலா, பொது செயலாளர் ஆனதே தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எனவே அவரது பெயரை பிரச்சாரத்தில் உச்சரிக்கக் கூடாது என்பது தினகரனின் கண்டிப்பான உத்தரவு.

சசிகலா சிறையில் இருக்கும் இந்த நேரத்தில் அவரது பெயரை பயன்படுத்தினால், கிடைக்கிற ஓட்டும் கிடைக்காமல் போய்விடும் என்றும் கட்சிக்காரர்களை தினகரன் எச்சரித்துள்ளார்.

அதனால், சசிகலா பெயரை சொல்லாமலே, அதிமுகவினர் அனைவரும் ஆர்.கே.நகரில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ள உறவுகள், சசிகலாவின் பெயர் இருட்டடிப்பு செய்வதை பார்த்து, பெரிய அளவில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

சசிகலா சிறை சென்ற ஒன்றரை மாதத்திலேயே, அவரது பெயரை முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ள தினகரன்,  இன்னும் எதை எல்லாம் செய்யப்போகிறாரோ? என்று குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். 

ஏற்கனவே, தமது  மகன் ஜெய் ஆனந்த் மூலம் சசிகலாவிடம் தினகரன் பற்றி வத்திவைத்து வரும் திவாகரனுக்கு, இது மேலும் வலு சேர்க்கும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

இதை எல்லாம் கேள்விப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி டென்ஷனாகி வருகிறார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என  தெரியவில்லை என்று தினகரன் ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.