dinakaran cannot meet sasikala in parappana agrahara
சந்திக்க சசிகலா மறுப்பு தெரிவித்ததால் சென்னை திரும்பிய டிடிவி தினகரன் பெசன்ட் நகரில் உள்ள தனது சொகுசு பங்களாவில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இரட்டை இலை பெற லஞ்சம் அளித்ததாகக் கூறி டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது தமிழகத்தை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டை இலையை வாங்கித் தருவதாகக் கூறி 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் பெற்ற மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 8 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே வழக்கு விசாரணைக்காக டெல்லியைச் சேர்ந்த காவல்துறை அதகாரி மதூர் வர்மா சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
கட்சியையும், ஆட்சியையும் எப்படி காப்பாற்றுவது என்பதில் குழப்பம் அடைந்த டிடிவி.தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு செல்வதாக நேற்று அறிவித்திருந்தார். இதனை முன்னிட்டு பரப்பன அக்ஹாரா சிறை வளாகத்தில் அவரது தொண்டர்கள் குவியத் தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தினகரனின் பெங்களூரு வருகை குறித்து சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கட்சியும் ஆட்சியும் கைமீறி போய்விட்டதே என்ற ஆத்திரத்தில், சசிகலா தினகரனை சந்திக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். இந்தத் தகவலும் உடனுக்குடன் டிடிவி.தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் பெங்களூரு புறநகர் பகுதியில் தங்கியிருந்த தினகரன் இரவோடு இரவாக நேற்றே சென்னை திரும்பிவிட்டாராம்.. மத்திய அரசின் பிடி நாளுக்கு நாள் இறுகி வருவதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தனது வழக்கறிஞர்களிடம் டிடிவி தற்சமயம் ஆலோசனை நடத்தி வருகிறார் என்கின்றனர் விசயமறிந்தவர்கள்.
