Dinakaran Advice on the phone for Panneerselvam
பன்னீர் அணியில் வாயில் வாஸ்து சரியில்லாத நபர்கள் இரண்டு பேர். ஒருவர் முணுசாமி! பாத்திரக்கடையில் யானைக்குட்டி நுழைஞ்சா மாதிரி படபடதடதடவென முரட்டுத்தனமாக போட்டுப் புரட்டி எதையாவது பேசி வைத்து பஞ்சாயத்தை இழுத்துவிடுவார். இன்னொன்னு நம்ம மாஃபா. ஊசிக்கே ஊசி போடுவது போல் நைஸாக சொருகுவார் ஆனால் வீரியத்தை பார்த்தீங்கன்னா வீல்ல்ல்...ன்னு அலற வைக்கும். இவரும் அணிகள் இணைப்புக்கு ஆப்பு அடிப்பதில் ஏக கில்லாடி.
எடப்பாடி அணியில் ஜெயக்குமார், சி.வி.சண்முகமும் பன்னீர் அணியில் மேற்படி முணு மற்றும் மாஃபா இல்லையென்றால், இரண்டு அணிகளும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எப்பவோ வெற்றிகரமான ஐம்பதாவது நாள் போஸ்டரை ஒட்டியிருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கொளுத்திப் போடுகிறார்கள்.
சரி! இப்போ அதுக்கென்ன? என்கிறீர்களா...பட்டாசு முணுவும், சைலண்ட் பாண்டியும் இருக்கும் வரை இந்த பப்பு வேகாது என்பது பன்னீருக்கும் தெரியும். ஆனாலும் இவர்களை அனுப்பிவிட்டால் அணியின் ஸ்ட்ரென்த் அநியாயத்துக்கு வீக் ஆகிடுமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுக்கிறாராம்.
இந்நிலையில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் தினகரன் தரப்பு பன்னீரிடம் தொடர்ந்து பேசி வருகிறது. பழனிசாமி அணியின் பரம எதிரியாகியிருக்கும் தினகரன் அண்ட்கோவின் அட்டாக் மேளா ஜூன் 14 முதல் துவங்குகிறது. சட்டமன்றம் துவங்கும் அந்த நாள் முதல்தான் தன்னை துரத்தி துரத்தி வேட்டையாடும் பழனிச்சாமி குழுமத்தை சிரித்துச் சிரித்து சீர்குலைக்க திட்டமிட்டிருக்கிறார் தினகரன்.

என்னதான் தன் கையில் பலமான எம்.எல்.ஏ.க்கள் படை இருந்தாலும் கூட ‘எதிரியின் எதிரி நண்பன்’ எனும் கான்செப்டில் பன்னீர் டீமையும் இணைத்துக் கொண்டால் சட்டமன்றத்தில் எடப்பாடி டீமை ஜரூராக படுத்தியெடுக்கலாமே என்பதுதான் தினகரனின் பிளான்.
பன்னீருடன் கைகோர்ப்பதில் தினகரனுக்கு எந்த சிக்கலுமில்லை. ஆனால் முணுசாமி, மாஃபா இந்த இரண்டு பேரை மட்டும் கழட்டிவிட்டு வரும்படி சிம்பிள் கண்டிஷனை போட்டிருக்கிறார் தினகரன். காரணம், இணைப்புச் சூழல் வரும்போது இவர்கள் இருவரும் பேசும் வார்த்தைகள் பி.பி.யை எகிற வைக்கலாம், அல்லது இணைந்த பின் உள்ளுக்குள் இருந்து கொண்டு இவர்கள் உருட்டும் தாயங்கள் இணைப்பின் தொடர்ச்சிக்கு இம்சை தரலாம் என்பது தினகரனின் எண்ணம். அதனால்தான் இந்த கண்டிஷன்.

ஆனால் இந்த ஒற்றை கண்டிஷன் பன்னீருக்கு இடிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் திவாகரனை வைத்து ஆட ஆரம்பித்திருக்கும் சசிகலாவுக்கு முழு எதிராக தினகரன் திரும்பியிருப்பதால், சசி எதிர்ப்பு நிலைப்பாடிலுள்ள தனக்கு இந்த இணைப்பு எந்த வகையிலும் நெருடலாக இல்லை என்பதே அவரது கணக்கு! அதனால் முணு மற்றும் பாண்டியை கழட்டிவிடுவாரா அல்லது எடப்பாடி டீம் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக சொன்னாலும் கூட அப்படியே வைத்திருப்பது போல் ‘நீங்க என் அணியில இல்ல, ஆனா இருக்கீங்க.’ என்று எஸ்.ஜே.சூர்யா போல் டயலாக் பேசிவிட்டு தினகரனை தேடி பெசண்ட் நகருக்கு நடப்பாரா என்று பார்ப்போம்.
இப்படி அவரு இங்கேயும், இவரு அங்கேயும், அந்த நிர்வாகி இப்படியும், இந்த நிர்வாகி அப்படியுமா ஆளுக்கொரு திசையில கசமுசான்னு ஓடி கட்சியை தாறுமாறா தலைசுத்த வைக்கிறாங்க. சுந்தர் சி படத்து கிளைமாக்ஸ் மாதிரி யாரு யார அடிக்கிறாங்க, யாரு யார தூக்குறாங்கன்னே புரியலை. அவரு கூட்டிட்டு வந்தவரை இவரு சேர்த்துக்குறாரு, இவரு கூட்டிட்டு வந்ததை அவரு இழுத்துக்குறாரு.
ஆக மொத்தத்துல நடராசன் சொன்னா மாதிரி...கட்சியை பார்த்து மக்கள் சிரிப்பா சிரிக்குறாங்க...
