மதுரை விமான நிலையத்தில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் ஆதரவாளர்களிடையேயும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்குகிடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது தள்ளுமுள்ளுவில் முடிந்தது. இதனால் போலீசார் தடியாடி நடத்தியுள்ளனர்.

டிடிவி தினகரன் இன்று மதியம் 1.30 மணிக்கு, விமானத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு வர இருந்தார். ஆனால், அவருக்கு முன்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 12.50 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இருந்தார். 

ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் வழி அனுப்புவதற்காக இரு தரப்பு ஆதரவாளர்களும் மதுரை விமான நிலையம் குழுமினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் செல்ல வேண்டிய விமானம் வராததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இவர்கள் இருவரும் 1.30 மணி விமானத்தில் செல்லலாம் என்று தகவல் வெளியானது. இது விமான நிலையத்தில் நின்றிருந்த இரு தரப்பு ஆதரவாளர்களிடையேயும் பரவியது.

இதையடுத்து, இரு தரப்பு ஆதரவாளர்களும் கோஷமிட்டனர். தினகரன் தரப்பு ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தினகரனுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

இந்த இரு தரப்பும் கோஷமிட்டு வந்த நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளுவில் நடந்து முடிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களிடையே நடந்த தள்ளுமுள்ளுவை கலைப்பதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினர்.