கருணாநிதியை ஏமாற்றி விட்டு மு.க.ஸ்டாலின் தனது நண்பர்களுடன் தாய்லாந்து சென்றார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

திமுகவுடன் கூட்டணி குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் கராத்தே தியாகராஜன். தான் நீக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என வெளிப்படையாகவே கூறி வந்தார் கராத்தே தியாகராஜன். இவர் நடிகர் ரஜினிகாந்த்தோடு நெருங்கிய நட்பு வட்டாராத்தில் இருப்பதால் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மேலிடத்துக்கு கூறி கராத்தே தியாகராஜனை நீக்கியதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின்  எழுப்பியுள்ள கேள்விகள் அதனைத்  தொடர்ந்து பல்வேறு விவதாங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் திமுக தலைவர் அண்ணன் மு,.க.ஸ்ட்டாலினுக்கு கடந்த கால நிகழ்வை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று தனது நண்பர்களுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றது விமானம் ஏறும் போது தான் முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதிக்கே தெரியும். மேலும் அந்தப்பயணம் மத்திய அரசின் அனுமதி பெறாமல் சென்றார் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன என்பதை நினைவூட்டுகிறேன்’’ என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.