ஆளுங்கட்சி என்ற மமதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில், இதுபோன்ற சோதனைகளை நடத்துகின்றனர். அதிமுக எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உட்பட 52 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, எஸ்.வேலுமணி மீது கூட்டு சதி, மோசடி, நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- ஆளுங்கட்சி என்ற மமதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில், இதுபோன்ற சோதனைகளை நடத்துகின்றனர். அதிமுக எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறது. காவல்துறையை விட்டு கட்சியை அழிக்கலாம் என்ற வகையில், கடந்த காலங்களில் பல செயல்கள் நடந்தன. அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறவில்லை. இது ஜனநாயக நாடு. நீதிமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகத்துறை, பத்திரிகை துறை எல்லாம் இருக்கின்றன. நீதிமன்றத்தில் எங்கள் கருத்துகளை எடுத்துவைப்போம். நிச்சயமாக அன்றைக்கு நிரபராதி என்ற நிலை ஏற்படும்.

இன்றைக்கு மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக, அதிமுகவைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சி கொண்டு, சோதனைகள் மூலம் களங்கம் ஏற்படுத்த நினைத்தால், நிச்சயமாக அது நடக்காது. நீதிமன்றம் இருக்கும் நிலையில், காவல்துறையை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம். உயிரை விட மானம் பெரிது. அப்படியிருக்கும்போது காவல்துறையை வைத்து ரெய்டு நடத்துகின்றனர். நீதிமன்றத்திலேயே தங்கள் ஆதாரங்களைக் கொடுத்திருக்கலாமே. சமூக விரோதி போன்று அவ்வளவு காவல்துறையினரைக் கூட்டி கட்சியின் இமேஜை பாதிக்கும் வகையில் இதனைச் செய்கின்றனர் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.