மணிப்பூர் வாழ் தமிழர்கள் நம்முடையவர்கள் அல்ல என்று நினைத்துவிட்டாரா? மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி!!
மாநில அரசின் வெளிநாட்டு அதிகார வரம்பு என்னவென்று கூட தெரியாமல் முதல்வர் பேசியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் வெளிநாட்டு அதிகார வரம்பு என்னவென்று கூட தெரியாமல் முதல்வர் பேசியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக, மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு தீ வைப்பு சம்பவங்களும், கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கலவரம் மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியுள்ளது. இந்தப் பகுதியில்தான் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மோதலால் மணிப்பூர் தலைநகர் இம்ப்பால், மோரே ஆகிய பகுதிகளில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: டிடிவி தினகரனை சந்திக்கும் ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் எதிர் தரப்பு - அடுத்து என்ன?
உலகத் தமிழர்களைக் காக்க அவதாரம் எடுத்தவர்கள் தாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா அரசின் முதலமைச்சர், மணிப்பூர் மாநிலத்தில், தமிழர்கள் படும் அல்லலைப் போக்குவதற்கும், அவர்களை மீட்பதற்கும் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது ஏன் என்று தெரியவில்லை. உக்ரைனிலும், சூடானிலும் சிக்கிய இந்தியர்களைக் காப்பாற்றி நம் நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்போதெல்லாம், 'ஊரில் கல்யாணம், மார்பில் சந்தனம்' என்று அலையும் விளம்பர மோக விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், அயல் நாட்டுத் தமிழர்களை மீட்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய அரசு அனுமதித்தால் அக்குழு உக்ரைனுக்கே சென்று தமிழர்களை மீட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மாநில அரசின் வெளிநாட்டு அதிகார வரம்பு என்னவென்று கூட தெரியாமல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: எப்படியெல்லாம் திணிக்க முடியுமோ அப்படியெல்லாம் இந்தியை திணிக்கிறாங்க... பாஜக மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!!
ஆனால் இன்று, நம் நாட்டில் உள்ள மணிப்பூரில் அவதியுறும் தமிழர்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை இந்த பொம்மை முதலமைச்சருக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லையா? அல்லது மணிப்பூர் வாழ் தமிழர்கள் நம்முடையவர்கள் அல்ல என்று நினைத்துவிட்டாரா? கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில், தங்கள் குடும்ப மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, மணிப்பூர் வாழ் தமிழக மக்களைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள் என்று நடுநிலையாளர்கள் அங்கலாய்க்கிறார்கள். நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மை திறமும் இன்றி, வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி என்ற மகாகவி பாரதியின் வைர வரிகளுக்கு கட்டியம் கூறும் வகையில் செயல்படும் இந்த விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் நம் சகோதர தமிழர்களின் உறவுகளைக் காக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.