நடிகர் ரஜினிகாந்த் வருமான வரித்துறைக்கு எழுதிய கடிதத்தில் தான் நண்பர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலித்ததாக கூறியுள்ளதை தொடர்ந்து அவரை கந்துவட்டி காந்த் என்று கூறி ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2002 – 2003  மற்றும் 2003 – 2004 மற்றும் 2004 – 2005 ஆகிய நிதி ஆண்டுகளில் நடிகர் ரஜினி தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் சில வருமானங்களை முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறி அவருக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வருமானத்தை தான் முறையாகவே தாக்கல் செய்திருப்பதாக கூறி அவர் செய்த மேல்முறையீட்டை ஏற்று ரஜினிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வருமான வரித்துறையே ரத்து செய்துவிட்டது.

இதனால் இந்த விவகாரத்தில் ரஜினிக்கு ஏற்பட இருந்த சிக்கல் தீர்ந்த நிலையில், வருமான வரித்துறைக்கு அவர் அனுப்பிய கடிதத்தால் தர்மசங்கடம் உருவாகியுள்ளது. அதாவது மேற்கூறிய 3 ஆண்டுகளில் வருமானத்தை முறையாக தெரிவிக்காததற்கு காரணம் என்று ரஜினி குறிப்பிட்டிருப்பது தான் அவரை கந்துவிட்டி காந்த் என்று விமர்சிக்க காரணமாகியுள்ளது. அதாவது அந்த 3 ஆண்டுகளும் தனது நண்பர்களுக்கு கை மாத்தாக பணம் கொடுத்ததாகவும் அதற்காக சொற்ப அளவில் வட்டி வசூலித்ததாகவும் ரஜினி வருமான வரித்துறையிடம் கூறியுள்ளார்.

ஆனால் இப்படி நண்பர்களுக்கு கைமாற்றுக்கு பணம் கொடுத்து வட்டி வசூலிப்பது தொழில் என்று தனக்கு தெரியாது என்றும் எதையாவது பொருளை அடமானமாக பெற்று அதற்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதை தான் வட்டித் தொழில் என்று தான் எண்ணிக் கொண்டிருந்ததாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் தான் கடன் கொடுத்த அனைவருமே தனக்கு நெருக்கமான நண்பர்கள் என்றும் ரஜினி கூறியிருந்தார். இதன் மூலம் தான் ரஜினி வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

ஆனால் இது குறித்து விசாரித்த போது அனைத்து நடிகர்களையும் போல ரஜினியும் தனது வருமான வரிக் கணக்குகளை  ஆடிட்டர்கள் மூலமாகவே தாக்கல் செய்வதாகவும் அப்போது ஒரு 60 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தில் சிக்கல் ஏற்பட்ட போது பலரும் உபயோகிக்ம் இந்த கடன் டெக்னிக்கை ஆடிட்டர் பயன்படுத்தி வருமான வரித்துறை வில்லங்கத்தை நீக்கியதாகவும் கூறுகிறார்கள். மற்றபடி வருமான வரித்துறையிடம் ரஜினி தரப்பில் அளித்த கடிதம் என்பது சம்பிரதாயமான ஒன்று தான் என்றும் ரஜினி எப்போதும் வட்டித் தொழில் செய்தது இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் சிஸ்டம் சரியில்லை என்று கூறி அ ரசியல் செய்ய நினைக்கும் ரஜினி வருமான வரித்துறையிடம் குறைந்தபட்ச நேர்மையை கூட கடைபிடிக்காதது ஏன் என்று கேள்வி எழுகிறது.