நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் வேலூர் தொகுதி தேர்தல் ஆகியவற்றில் தினகரனுக்கு கிடைத்த கடுமையான தோல்விக்கு பிறகு  அவரது கட்சியிலிருந்து மிக முக்கிய நிர்வாகிகள் வரிசையாக கழன்று தி.மு.ம. மற்றும் அ.தி.மு.க.வுக்கு ஓடிக் கொண்டே இருக்கின்றனர். அதில் லேட்டஸ்ட், மாஜி அமைச்சர் பச்சைமால். 

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர், வனத்துறை அமைச்சர் என்றெல்லாம் கோலோச்சிய பச்சைமால், சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, தினகரனின் தலைமையை ஏற்று, அ.ம.மு.க.வில் இருந்தார். சமீபத்தில் தளவாய் சுந்தரத்தின் இழுப்பின் பேரில் மீண்டும் அ.தி.மு.க.வுக்குள் வந்திருக்கிறார். ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டதற்கு “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகியதற்காக நான் தினகரனை விமர்சிக்க விரும்பவில்லை. சசிகலா பற்றியும் ஒன்றும் சொல்ல மாட்டேன். 

ஆனால் அ.ம.மு.க.வில் மண்டல பொறுப்பாளராக இருக்கும் மாணிக்கராஜாவின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. தென் மண்டலத்தில் தனி ஆதிக்கம் செலுத்துகிறார். எனக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தார். இதையெல்லம டி.டி.வி.யிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையுமில்லை. அதனால் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டேன். அ.ம.மு.க.வானது தினகரனின் கட்டுப்பாட்டில் இல்லை! என்பதே உண்மை.” என்றிருக்கிறார்.

ஆனால் பச்சைமாலின் இந்த கட்சி தாவல் குறித்துப் பேசும் கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.வினரோ “மாணிக்கராஜாவால் மனம் நொந்ததாக பச்சைமால் சொல்வது பொய். அவர் கட்சி தாவிட காரணமே வேறு. அதாவது, கேரளாவிலும் தமிழகத்திலும் சோலார் பேனல் ஊழலில் சிக்கினாரே சரிதா நாயர்! அவரை அ.ம.மு.க.வில் இணைக்க முயன்றிருக்கிறார் பச்சைமால். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து, செம்ம டோஸ் விட்டிருக்கிறார் தினகரன். இதனால்தான் அவர் அ.ம.மு.க.விலிருந்து வெளியேறிவிட்டார். ” என்கின்றனர். ஆனால் பச்சைமாலோ இன்னமும் மாணிக்கராஜாவைதான் குற்றம் கூறிக் கொண்டிருக்கிறார். 

-    விஷ்ணுப்ரியா