ரூ.2,000 நோட்டுகளின் ஜெராக்ஸ் நகல்களை புழக்கத்தில்விட்ட குற்றத்துக்காக ஆம்பூரில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். ஆம்பூரிலுள்ள ஒரு கடையில் சிகரெட் பாக்கெட் வாங்குவதற்காக சதாம் உசேன் (வயது 28) என்பவர் ரூ.2000 நோட்டைக் கொடுத்துள்ளார். அந்நோட்டு கள்ள நோட்டாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கடை உரிமையாளர் விடுத்த எச்சரிக்கைக் குரலின் பேரில் உள்ளூர் மக்கள் அந்நபரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இவ்விவகாரம் பற்றி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரிடமிருந்து கள்ள நோட்டை அவர் பெற்றதாகவும், கமிஷன் அடிப்படையில் கள்ள நோட்டைப் புழக்கத்தில் விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலெக்சாண்டர், சதாம் உசேன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெராக்ஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி அலெக்சாண்டர் கள்ள நோட்டுகளைத் தயாரித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் ஒட்டுமொத்தமாக ரூ.40,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை வாணியம்பாடி சந்தை பகுதியில் புழக்கத்தில் விட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.