தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் மேகதாது, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ், இ.யூனியன் முஸ்லீம் லீக் வெளிநடப்பு செய்தது.

பேரவை கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரையாற்றினார்.  ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆனால் தினகரன் வெளிநடப்பு செய்யாமல் சட்டப்பேரவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்றார். அளுங்கட்சியினர் ஒருபுறம் அமர்ந்து இருக்க, டிடிவி தினகரன் மட்டும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 148ம் எண் இருக்கையில்  தனியாக அமர்ந்திருந்தார்.

ஜெயலலிதா இருந்தபோது இப்படித்தான் நடந்தது. ஒட்டு மொத்த மீடியாவின் கவனத்தையும் தன் மீதே வைத்திருந்தார்.  எத்தனை பேர் அதிமுகவில் இருந்தாலும் கூட ஃபோகஸ் என்னவோ ஜெயலலிதா மீதுதான் இருந்தது. முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என அத்தனை பேர் இருந்தும் கம்பீரத்தோடு வந்த தினகரன் , மீண்டும் தனி மனிதனாக சட்டசபையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதேபோல, பொதிகை டிவியில் ஆளுநர் உரை வாசிக்கும் நேரலையின் போதும் கூட அடிக்கடி கேமரா தினகரன் பக்கமும் போய் வந்தது முதல்வரை விட தினகரனை அதிகம் காட்டப்பட்டது.

எதிர்கட்சிகளின் கூட்டத்தில் ஒருவராய் இருந்த தினகரன், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநர் உரையை புறக்கணித்துவிட்டு வெளியில் சென்ற நிலையில்,  தனி ஒருவனாய் குரல் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் தானோ என்னவோ தினகரன் மீதே அனைவரின் கவனமும் இருந்தது.  

கடந்த முறை சட்டசபைக்கு வந்த தினகரன், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தாலும் அவர் கெத்தாக தனியாக இருந்து உரையை நிறைவு செய்துவிட்டே வெளியில் வந்தார். கடந்த முறையைப்போலவே இப்போதும் தன்னை மீண்டும் தான் தனி ஒருவன் என நிரூபித்துள்ளார்.