துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம் தற்போது பகல் கொள்ளையில் முடிந்துள்ளதாக எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பன்னீர்செல்வத்துக்கு சாந்தமான முகம் ஒன்று; கொடூரமான முகம் மற்றொன்று என இரண்டு முகங்கள் உள்ளன. தற்போது வெளிப்பட்டிருப்பது அவரது சுயரூபம் ஆகும். அவர். தொடங்கிய தர்மயுத்தம் தற்போது பகல் கொள்ளையில் முடிந்துள்ளது. பெட்டி பாம்பாக அடங்கி கிடந்தவர் தற்போது ஆட்டம் போடுகிறார். அற்பனுக்கு வாழ்வு வந்ததால் அர்த்த ராத்திரியில் கொடி பிடிக்கிறார்.

ஜானகி அணியில் இருந்த இவர் ஜெயலலிதா அணிக்கு மாறிய பின்னர் மாவட்ட செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர் என்று அவரை உருவாக்கியது. யார்? என்று தேனி மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். நான் பெரியகுளத்தில் வீடு கட்டி குடிவரப் போகிறேன். பின்னர் அடிக்கடி தேனி மாவட்டத்துக்கு வருவேன். இந்த அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் எந்த அளவு குறைக்கப்படுமோ, அந்த அளவுக்கு குறைக்கப்படும். எனக்கு போட்டி, பொறாமை எதுவும் இல்லை. பெரியார் சிலையை உடைப்போம் என எச்.ராஜா கூறியது கண்டிக்கதக்கது. பெரியார் பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சீர்திருத்தவாதி. மத்தியில் அவர்கள் ஆட்சி இருப்பதால், இப்படி பேசி வருகிறார். மக்கள் இதனை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தமிழகத்தில் பாஜக கட்சியை குழிதோண்டி புதைத்து வருகிறார். 

மத்திய அரசு விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். எனக்கு வாக்களித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மீது இந்த அரசுக்கு கோபம். அதனால்தான் இதுவரை எந்த நலத்திட்ட உதவியும் செய்யவில்லை. தென் மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல் வடமாவட்ட மக்களும் என் மீது அன்பு வைத்துள்ளனர். விரைவில் ஜெயலலிதா ஆட்சி உருவாகும் என்று தினகரன் தெரிவித்தார்.