dgp sathyanarayana denies about sasikala issue

பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் எதும் செய்து தரவில்லை என்றும், தனியாக சமையல் அறை எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் டிஜிபி சத்தியநாராயணா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக ரூபா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்குச் சென்று, பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற ரூபா அங்கு ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அவருக்கு சமையல் செய்து கொடுக்க சில கைதிகள் நியமிக்கப்பட்டிருப்பதையும் ரூபா கண்டுபிடித்தார்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள், ஊழியர்கள், கைதிகள் உள்ளிட்டோரிடம் ரூபா விசாணை நடத்தி அதை பதிவு செய்துள்ளார். அப்போது சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ரூபாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுக்க தாங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறதே இது உண்மையா? அப்படி இல்லை என்றால் அது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இது குறித்து நான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரப்பரன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் எதும் தரவில்லை என்று கூறினார். சசிகலா இருக்கும் சிறையில் தனியாக சமையல் அறை எதுவும் அமைக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சாதாரண அறையில்தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் விதிகளுக்குட்பட்டே தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என்றும், ஏதோ ஒரு சதி திட்டத்தில் என்னை சிக்க வைக்க டி.ஐ.ஜி. ரூபாய் முயற்சிப்பதாகவும் டிஜிபி சத்யநாராயணா குற்றம் சாட்டியுள்ளார்.