தமிழக காவல்துறையை மையமாக வைத்து எழுந்துள்ள 350 கோடி ரூபாய் ஊழல் புகார் விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு டிஜிபி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காவல்துறை நவீனப்படுத்தவும் தமிழகத்தில் காவல்துறைக்கு உதவியாக பொது இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் பெரும் அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் டெண்டர் மூலமாக தமிழக காவல்துறைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த டெண்டர் விவகாரத்தில் தான் 350 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகார் இன்று நேற்றல்ல ஒரு ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டே இந்த புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் விசாரரணை நடத்தப்படவில்லை. ஆனால் டிஜிபியாக டிகே ராஜேந்திரன் ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக ஜே..கே திரிபாதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற சில நாட்களிலேயே இந்த காவல்துறை உபகரண ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உள்துறைக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மிக ரகசியமாக அந்த கடிதத்திற்கு உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பிய பிறகே திரிபாதி செய்த செயல் முதலமைச்சர் அலுவலகத்திற்கே தெரியவந்தது. இதனை அடுத்து அவசர அவசரமாக இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவங்கியுள்ளது. அதே சமயம் இது ஊழல் இல்லை, நிர்வாக ரீதியிலான ஒரு சில தவறுகள் என்றும் அதை விசாரித்து வருவதாக தமிக போலீஸ் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வரை கடிதம் அனுப்பிய ஜே.கே திரிபாதியின் செயலால் கோட்டை வட்டாரம் ஆடிப்போய் இருப்பதாக கூறுகிறார்கள்.