அனைத்து காவலர்களும் வருகை பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழித் திட்ட செயலாக்கம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நடந்த ஆய்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சுற்றறிக்கையில் சொற்றொடர்கள் சரியாக அமையவில்லை. சொற்களை வரிசையாக அடுக்கவில்லை. கோர்வையாக எழுதப்படவில்லை. எழுத்துப்பிழையுடன் பொருட்பிழையும் ஆங்காங்கே தென்படுகின்றன. இந்த சுற்றறிக்கை யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ, அந்தத் துறையை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறையினருக்கு டிஜிபி கட்டளையிட்டுள்ளதாக அமைந்துள்ளது பெரும் பிழை. 

உதாரணமாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம் இம்மாதம் கடந்த 7, 8, 9 தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவகலத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டார்கள். இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்களை தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்து பதிவேடுகளையும்  தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் என்றும்,  தமிழில் கையெழுத்திட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது காவல்துறையினருக்கு கட்டளை பிறப்பிப்பதற்கு பதிலாக தமிழ் வளர்ச்சி பணியாளர்களுக்கு அந்த உத்தரவை டிஜிபி பணித்துள்ளதாக அர்த்தம் கொள்ளும் வகையில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. 

அனைத்து வரைவு கடித தொடர்புகளும், குறிப்பாணைகளும் ( குறிப்பானைகளும் தவறு) என்பதே சரியான வார்த்தை. அதே சொற்றொடரில் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது எழதப்பட என எழுத்துப்பிழையுடன் அர்த்தம் கொள்ள இயலாதபடி எழுதப்பட்டுள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் பொருள் மயக்கம்,  சொற்றொடர் குழப்பம் இல்லாமல் கவனம் செலுத்தி இருக்க வேண்டாமா? 

முன்பெல்லாம் சுற்றறிக்கை என்பது சம்பந்தப்பட்ட துறையினருக்கு மட்டுமே சென்று சேரும். ஆனால், இப்போதைய வாட்ஸ்-அப் ட்விட்டர், முகநூல் காலத்தில் சாதாரணமானவர்கள் கையில் கூட அனைத்து அறிக்கைகளும் கிடைத்து விடுகிறது. அவர்கள் அந்த அறிக்கைகளை பார்த்து குறைகளை அறிந்து விவாதமாக்குகிறார்கள். ஆகவே தமிழ் வளர்ச்சிக்காக அனுப்பப்படும்  இந்த அறிக்கை தயாரிப்பில்  கவனம் செலுத்தி இருக்க வேண்டாமா?

டி.ஜி.பி.திரிபாதிக்கு பதிலாக மு.சொக்கலிங்கம் என்பவர் கையொப்பமிட்டு இருக்கிறார்.  காரணம் டி.ஜி.பி திரிபாதி ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழில் எழுதத் தெரியாது.  இந்தக் கடிதத்தில் தமிழில் கையெழுத்து போடுவது அவசியம் என்பதால் காவல்துறையை சேர்ந்த மற்றொருவர் தமிழில் கையெழுத்திட்டு இருக்கிறார்.