தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் இவரின் அறிக்கைக்கு தேவேந்திர வேளாளர் அமைப்புகளிடம் இருந்து எதிர் கருத்துக்கள் அம்புகளாக புறப்பட்டிருக்கிறது.

மே 11,12-2012ல், மதுரையில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சங்கமம் மாநாட்டில் பட்டியல் வகுப்பிலுள்ள ஏழு உட்பிரிவுகளை குடும்பன், பண்ணாடி, காலாடி,கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிரியான் இணைத்து ஒரே பெயராக தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2015, ஆகஸ்ட் 6ந் தேதி அன்று மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய தேவேந்திரகுல வேளாளர் மாநாட்டில், பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா அவர்கள் கலந்துகொண்டு ,மதுரை மாநாட்டு தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

2015 செப்டம்பர் 16ந் தேதி அன்று டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பிரதிநிதிகள் 101 பேர், பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து,மேற்படி கோரிக்கை மனுவை அளித்தனர். தனது இல்லத்தில் விருந்தளித்ததோடு, அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பிரதமர் அவர்கள் அறிவித்தார்.

தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டி, மாபெரும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட 5 லட்சம் கையெழுத்துப் படிவங்கள், மதுரையில் நடந்த நிறைவு விழாவில் பிரதமர் அலுவலக அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர் சிங் அவர்களிடம், 2016 பிப்ரவரி 8ந் தேதி அன்று ஒப்படைக்கப்பட்டது.

மே 2016 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ,தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையில், தேவேந்திர குல வேளாளர்களின் உட்பிரிவைச் சேர்ந்த பலரும் தங்களை அந்தப் பொதுப் பெயரில் குறிப்பிட வேண்டும் என அரசாணை வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை   பல்கலைக்கழக  மானுடவியல்  துறைத்  தலைவர் டாக்டர்  S சுமதி  அவர்கள்  தலைமையில்  குழு அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணி தமிழகம்   முழுவதும் நடந்துள்ளது.என நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் முருகன்.

இந்த அறிக்கைக்கு எதிர் அம்பாக ஷியாம்கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்..
எங்கள் கோரிக்கை "தேவேந்திர குல வேளாளர்" என்ற பெயர் அரசாணை மட்டும் அல்ல.அது தமிழக அரசு வெளியிட வேண்டிய சாதாரணமான அரசாணை.ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேறுவதே முக்கியமான கோரிக்கை, அது மத்திய அரசு தாமாகவே முன் வந்து செய்யலாம்.செய்யுமா?! இதற்கு தமிழக அரசு எந்த அறிக்கை அனுப்ப வேண்டும்?என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து தமிழர் தேசியக் கழகத்தலைவர் மு.கா. வையவன் பேசும் போது...
அரசாணை என்பது வேறு; எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்று என்பது வேறு: தேவேந்திர குலவேளாளர் என்று அறிவிப்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு கமிசன் போட்டார். அந்த கமிசன் அறிக்கை சமர்ப்பிப்பதற்குள்  அவரின் ஆட்சி முடிஞ்சு போச்சு.அதன் கமிசன் தலைவராக இருந்த நீதிபதி  இறந்து போனார். கட ந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக தேவேந்திரகுலவேளாளர் குறித்த அரசாணை வெளியிடப்படும் என்று சொன்னார். எடப்பாடி ஒரு படிமேலே போய் இதற்கு கமிசன் அமைத்தார்..இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலலைமை செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.அது அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அப்போதெல்லாம் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடுவதாக ஒரு அறிக்கையை வெளியிடுவதும் எங்கள் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இதுபோன்று திராவிடக்கட்சிகளும் பாஜக காங்கிரஸ் கட்சிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். பட்டியலில் இருந்து வெளியேற்றுவது அரசியலமைப்பு சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றம். பாஜக அரசு இரண்டாவது முறையாக மத்திய அரசு அமைத்திருக்கிறது. மத்திய அரசுக்கோ மாநில அரசுக்கோ கமிசன் அமைப்பது பட்டியலில் சேர்ப்பது என்பது பெரிய விசயம் அல்ல. அதற்கு உதாரணம்: முற்பட்ட பிரிவினருக்கு 10சதவிதம் இட ஒதுக்கீடு மக்களவை மாநிலங்களவையில் 3 நாளில் நிறைவேறியது.திராவிடக்கட்சிக்கு இணையான பொய்யான அறிக்கைகளை தமிழகத்தில் அரசியல் செய்வதற்காக பாஜகவும் எங்களை பயன்படுத்தி வருகிறது என்பது தான் உண்மை என்கிறார்.

மள்ளர்நாடு அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராஜன் பேசும் போது..

"மள்ளர்நாடு கடந்த 15 வருடங்களாக பட்டியல்வெளியேற்றம்  தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.எங்கள் சமூக மக்களுக்கு இவை இரண்டும் இரண்டு  கண்களாகும்.மதுரையில் கடந்த 2015 ம் ஆண்டு பாஜகவின் தலைவர்  அமித்ஷா மதுரை பிரகடனம் என்று அறிவித்துச் சென்றது இன்று வரை எட்டுச்சுரைக்காயாக தான் உள்ளது.தற்போது இருக்கின்ற சூழலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் பத்திரிகை குறிப்பில் விரைவில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடப்படும் என்று கூறி உள்ளார். அதை மள்ளர்நாடு சார்பாக வரவேற்கிறேன்.அதே வேலையில் பேச்சளவில் இல்லாமல் செயலில் காட்டினால் உலகளவில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களும் தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அறிவிக்கப்படும் என்றார்கள் அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தி வாய்ந்த கட்சியாக உருவாகும் என்றால் அது மிகையாகாது.