இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் குடும்பத்தை சேர்ந்த மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 500மதிப்பெண் பெற்று அடுத்த தலைமுறைக்கான விடிவெள்ளியாக போக காத்திருக்கிறார். ஆனால் அவரது குடும்பம் சாதாரண ஓலைக்குடிசை வீடு.அதில் மின்சாரம் கூட இல்லை. பெண்கள் ஓதுங்க கூட இடம் இல்லை. தூய்மை பாரதம் இந்த மக்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து வைராக்கியத்தோடு படித்து தன் தலைமுறையை மாற்றவேண்டும் என்று துடிக்கும் மாணவிக்கு மேல்படிப்புக்காக கல்லூரி வாசல் கதவை தட்டுவதற்கு பணம் இல்லை. சாதி சான்றிதழ் இல்லை.இவர்களுக்கு சாதிசான்றும் கொடுக்க அதிகாரிகள் முன்வருவதில்லை. 

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலைபகுதிக்கு பின்புறம் அமைந்துள்ளது  தென்பரங்குன்றம். இங்கு பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.நான்கு பெண் பிள்ளைகளுடன் பிறந்த மாணவிதான் தேவயானி. இவர் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி .12ம் வகுப்பில் 500/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.சாப்பாட்டிற்கே வழியில்லாத இந்த மாணவி டியூசன் படிக்க கூட வழியில்லாமல் வீட்டில் இருக்கும் காண்டா விளக்கு ,தெருவிளக்குகளில் படித்து தன் சமூக மக்களை தட்டி எழுப்பியிருக்கிறார். தன் தந்தை குடுகுடுப்பு குறி சொல்லி வந்து அதன் மூலம் வரும் வருமானத்தை கொடுத்தால்  தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்பதான் கஞ்சி குடிக்க முடியும். இப்படிபட்ட பிள்ளைகள் தான் வெறிதனத்தோடு ஆர்வத்தோடு கல்வி கற்று வருகிறார்கள். காரணம் கல்வி மற்றும் அரசு அதிகாரம் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை அல்லது குடிசை வீட்டை கோபுரமாக்கும் என்பதை அவர்கள் தெரிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இந்த நிலையில் தான் தேவயானியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ.டாக்டர்.சரவணனை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லியிருக்கிறார்கள்.உடனே அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற எம்எல்ஏ.டாக்டர் .சரவணன் அந்த மாணவியை கவுரப்படுத்தியதோடு கல்லூரிப்படிக்கான அனைத்து செலவையும் தானே ஏற்றுக்கொள்ளுவதாகவும் அவருக்கு தேவையான சாதி சான்றிதழ் பெற்று தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று தருவதற்கான முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார்.


இது குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ.டாக்டர் .சரவணம் பேசும் போது.." இதுபோன்ற மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற்று அரசு அதிகாரத்திற்கு வரவேண்டும். இவர்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு தான் மக்களின் வறுமை என்ன, பசி என்ன என்று தெரியும். இவர்களும் மக்களுக்கு உதவுவார்கள்.தேவயானியை போன்று தமிழகத்தில் ஏராளமான மாணவர்கள் இருக்கலாம். என்னைப்போன்ற எம்எல்ஏக்கள் , எம்பிக்கள், செல்வந்தர்கள், தன்னார்வலர்கள் அவர்களை அடையாளம் கண்டு மேற்கல்வி அளித்து நாம் தான் கைதூக்கிவிட வேண்டும். அந்த மாணவி மேற்படிப்பு படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் நானே ஏற்றதோடு இல்லாமல் கல்லூரியில் இடம்பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்கிறார்.

தேவயானி போன்று இந்தியாவில் எத்தனை தேவயானியோ...? இது தான் இந்தியாவின் இன்னொரு முகம். சிறுபான்மையின மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் இவரைப்போல் நிறைய விடிவெள்ளிகள் இருட்டில் முடங்கியிருக்கலாம்.