கர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் தனித்துபோட்டியிடும் என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து 14 மாதங்கள் ஆட்சியில் இருந்தன. நாடாளுமன்றத் தேர்தலையும் இரு கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு இரு கட்சிகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது. குமாரசாமி ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாதான் காரணம் என மதசார்பற்ற ஜனதாதளம் வெளிப்படையாக குற்றம் சாட்டியது. இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு சிக்கலாகவே இருந்துவந்தது.

 
இந்நிலையில் கர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் ஓர் அணியில் தேர்தலைச் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், “15 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுடன்  நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. நாங்கள் தேர்தலைத் தனித்தே சந்திக்கிறோம். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தபோது எங்கள் வாக்குகளை பாஜகவிடம்தான் இழந்தோம். எனவே கூட்டணி அமைத்தது போதும். வெற்றியோ தோல்வியோ, எதுவாக இருந்தாலும் தனித்து நிற்பதே எங்கள் நிலைப்பாடு" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கர்நாடக இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம்  தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.