ஆந்திராவின் துணை முதலமைச்சர் பி. புஷ்பா ஸ்ரீவாணி ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் பழங்குடி நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர்தான் தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி தற்போது "அம்ருதா பூமி" என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்து வருகிறார். இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தை பருக்ருதி ஆதி தேவா பாவா புரொடக்சன் தயாரித்து வருகிறது. ஏபி ஆனந்த் என்பவர் "அம்ருதா பூமி" படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விசாகநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா என்ற கிராமத்தில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர்  புஷ்பா ஸ்ரீவாணியுடன் விசாகநகரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஜவஹர்லால் கலந்து கொண்டார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் அனுமதி வாங்கியுள்ளார். அங்குள்ள ஒரு பழங்குடியினர் நலத்துறை பள்ளியிலும், அருகில் உள்ள வயல்களிலும் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் பங்கேற்று நடித்தார்.  

"அம்ருதா பூமி" படத்தில் ஆசிரியை வேடத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த பி. புஷ்பா ஸ்ரீவாணி, மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் நடித்து வருகிறேன் என்றார்.

நல்ல விஷயத்திற்காக களம் இறங்கி உள்ள துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணியை ஆந்திர மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.