Asianet News TamilAsianet News Tamil

தெளிவுபடுத்திய விஷயத்தை திரும்ப திரும்ப கிளறும் ஸ்டாலின்.. ஓபிஎஸ் கடும் கண்டனம்

15வது நிதிக்குழுவிடமிருந்து தமிழகம் என்ன பெற்றது என்று கேள்வியெழுப்பியிருந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே விளக்கமளித்தும் மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

deputy chief minister panneerselvam retaliation to opposition leader mk stalin
Author
Chennai, First Published Apr 26, 2020, 5:05 PM IST

தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு தரமான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திவருவதுடன், மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. அதனால் தான் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 960 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. 

ஆனாலும் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமியும் மற்ற அமைச்சர்களும் பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் 15வது நிதிக்குழுவிடமிருந்து தமிழக அரசு பெற்ற நிதி குறித்து ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளர்.

அந்த அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் 15-வது நிதிக்குழுவிடம் இருந்து தமிழ்நாடு என்ன பெற்றுள்ளது என்பதை குறித்து கொரனோ தடுப்பு பணியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு தேவையில்லாத சர்ச்சையை கிளறி உள்ளார். பிப்ரவரி 14, 2020 அன்று நான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் 2020-21ம் ஆண்டில் 15-வது நிதிக் குழுவின் முதல் அறிக்கையினால் தமிழ்நாட்டிற்கு என்ன சாதகங்கள் மற்றும் என்ன பாதகங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருந்தேன். 2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பத்தி 8-ல் நான் மிக தெளிவாக பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

deputy chief minister panneerselvam retaliation to opposition leader mk stalin

மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து இனி பங்கு அளிக்கப்படாது என்பதைக் கருத்தில் கொண்டால், மொத்த நிதிப்பகிர்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைப்பினால், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு இருக்காது. மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து 4.189 சதவீதமாக, சிறிய அளவே உயர்ந்துள்ளது. கடந்த சில நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து வந்த போக்கு, இந்த உயர்வினால் மாற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், கடந்தகால அநீதிகளுக்கு, அதிலும் குறிப்பாக பதினான்காவது நிதிக்குழு இழைத்த பாதிப்புகளுக்கு இது முழுமையான பரிகாரமாகாது. எனவே, தமிழ்நாடு போன்ற சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்கு சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து மீண்டும் வலியுறுத்துவோம்.

இதிலிருந்தே, தமிழ்நாட்டிற்கு வரிவருவாயில் சிறிதளவில் கூடுதல் பங்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அது முன்பு இருந்த நிலையில் ஒரு நல்ல முன்னேற்றம் என்பதையும் குறிப்பிட்டு, அதே நேரத்தில் இந்த கூடுதல் பங்கு முன்பு ஏற்பட்ட அநீதிகளை முழுமையாக களையவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். மேலும், இது குறித்து தொடர்ந்து அம்மாவின் அரசு நிதிக் குழுவின் முன் தன் குரலை எழுப்பும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். 

deputy chief minister panneerselvam retaliation to opposition leader mk stalin

இந்த நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. நான் நிதிநிலை அறிக்கையில் கூறியதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, நான் அந்த நேரத்தில் மத்திய அரசை விமர்சித்ததாகவும், தற்போது நிலை மாறிவிட்டேன் என்று மாண்புமிகு எதிர்கட்சி தலைவா; சொல்வது முற்றிலும் தவறான ஒரு கூற்று ஆகும்.

“தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது நிதிநிலை அறிக்கையில் கீழ்கண்டவாறு பத்தி 9-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.”

நிதிப்பகிர்விற்குப் பின்னரும் மாநில அரசு வருவாய்ப் பற்றாக் குறையையே சந்திக்கும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பதினைந்தாவது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இவ்வறிக்கை ஏற்றுக்கொண்டதையே இது குறிக்கும். எனினும், மத்திய அரசின் ‘நடவடிக்கை அறிக்கையில்’, நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக, 74,340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் இம்மானியத்திற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தும்.

deputy chief minister panneerselvam retaliation to opposition leader mk stalin

“இதிலிருந்து 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் காரணமாக என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என்பதும் மத்திய நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாதது ஆகிய இரண்டு கருத்துகளும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன. 24.4.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள என்னுடைய அறிக்கையில் தமிழ்நாடு வருவாய் பற்றாக்குறை மானியத்தை முதல் முறை பெற்றதையும், அதில் முதல் தவணை பெறப்பட்டுள்ளது. என்பதையும் நான் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளேன். ஒரு நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிறைவு பெறும் என்பது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றால் கூடுதல் தொகை துணை மானிய கோரிக்கைகளின் மூலமாகவும், திருத்திய வரவு செலவு மதிப்பீடுகளின் மூலமாகவும் பெறுவதற்கு முழு வாய்ப்பு உள்ளது. எனவே, நான் நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழ்நாடு பெறவேண்டிய முழு தொகையைஹம; இந்த ஆண்டுக்குள் மாண்புமிகு அம்மாவின் அரசு தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

2019-20ம் நிதி ஆண்டில் மத்திய அரசு வரவு செலவு திட்டத்தில் மதிப்பிட்ட தமிழ்நாட்டின் வரிவருவாயின் பங்குத் தொகை திருத்திய மதிப்பீடுகளில் குறைந்து விட்டதை சுட்டிக் காட்டியிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய வரி வருவாயில் எவ்வளவு நிதி அளிக்க உள்ளது என்பதைக் குறிப்பிடும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் இந்த நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவிக்கும். திருத்திய மதிப்பீட்டில் வரிவருவாய் எந்த அளவுக்கு ஈட்டப்பட்டுள்ளது என்கிற நிலையின் அடிப்படையில் விடுவிக்கப்படும் தொகைகளில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், முந்தைய ஆண்டு இந்தியக் கணக்காயர் மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் சான்றளிக்கப்பட்ட இறுதி வருவாய் ஈட்டலின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் விடுவிக்க வேண்டிய தொகைகள் சரி செய்யப்படும். அந்த அடிப்படையில் தான் 2019-20ம் ஆண்டு (14-வது நிதிக் குழுவின் பரிந்துரை காலத்தின் இறுதி ஆண்டு) திருத்திய மதிப்பீடுகளில் தமிழ்நாட்டிற்கு வரப்பெறவேண்டிய வருவாய் பங்குத் தொகை குறைந்துவிட்டது. இதற்கும் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இந்த அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளாமலேயே மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தேவையில்லாத, எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

2018-19ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்கு 14வது நிதி குழுவினால் இயற்றப்பட்ட அநீதிகள் குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்திருந்தேன். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் ஒருபொழுதும் அநீதி ஏற்படக்கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை. அந்தக் கொள்கையிலிருந்து நாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். 

deputy chief minister panneerselvam retaliation to opposition leader mk stalin

ஏற்கெனவே தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை 2020-21ல் 15-வது நிதிக்குழு பரிந்துரையின் மீது தமிழக அரசு தனது நிலையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கேள்விகளுக்கு நான் ஏற்கெனவே தெளிவாக பதிலளித்த நிலையில் மேலும் சில கேள்விகளை அவர் தற்போது வினவியுள்ளார். நான் என்னுடைய அறிக்கையில் மக்கள்தொகை, பரப்பளவு, வருமான இடைவெளி போன்ற தமிழ்நாட்டிற்கு வலு சேர்க்காத காரணிகளுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்குவதன் காரணமாக நமக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை வலியுறுத்தி இது குறித்து நிதிக்குழுவிற்கு ஒரு கோரிக்கை மனுவினை அரசு தயார் செய்து வருகிறது என்று குறிப்பிட்டும், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை 15-வது நிதிக்குழுவிடம் சரியாக எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை தொடர்ந்து நிலை நிறுத்துவோம் என தெரிவித்துள்ள பின்னரும் இதுபோன்ற வினாக்கள் எழுப்பப்படுவது வேதனை அளிக்கிறது.

இந்திய நாடும், தமிழ்நாடும் கொடூரமான கொரோனா நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக ஆற்றவேண்டிய உடனடி பணிகளைப் பற்றி கவலைப்படாமல் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து தேவையில்லாத சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் கிளறுவது கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு எப்பொழுதும் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் யாருக்காகவும், யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்வதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios