அதிக விலைக்கு விற்கப்படும் பொட்டல பொருட்கள், பெட்ரோல் நிலையங்களில் குறைவான பெட்ரோலை நிரப்பி ஏமாற்றுதல் ஆகியவை தொடர்பாக ”TN-LMCTS” என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிலாளர் துறை மூலம் செயல்படுத்தப்படும் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் கடைகள், நியாயவிலைக் கடைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வின்போது சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் 612 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதில், 73 தவறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், கடந்த 2011-ம் ஆண்டு பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், சந்தைகள் ஆகிய இடங்களில் குடிநீர் பாட்டில், குளிர்பானங்கள், அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாக விற்பது தொடர்பாக 719 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 73 இடங்களில் தவறு நடந்தது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இது போன்று நுகர்வோரிடம் பொட்டலப் பொருட்களில் அறிவிக்கப்பட்டதை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டாலோ, பெட்ரோல் நிலையங்களில் குறைவான பெட்ரோல் நிரப்பப்பட்டாலோ தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படுத்தப்படும், ”TN- LMCTS” என்ற கைபேசி செயலி மூலமாக புகார் செய்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.