Asianet News Tamil

பாஜகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்.. பரபரப்பாக அறிவித்த திருமாவளவன்.

அவரை மோசமான நிலையில் சிறையில் வைத்திருந்ததால் அங்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே பாஜக அரசு அனுமதி தந்தது. 

Demonstration across Tamil Nadu condemning BJP .. Thirumavalavan announced.
Author
Chennai, First Published Jul 7, 2021, 3:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பாஜக அரசின் கொடுங்கோன்மையைக் கண்டித்து  இடதுசாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைவர் திருமாவளவன் விடித்துள்ள அறிக்கை பின்வருமாறு:- 
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றி வந்த 84 வயதான ஸ்டேன் சாமியை பொய் வழக்கில் கைது செய்து, அவர் மரணமடைவதற்கு பாஜக அரசு காரணமாகியுள்ளது. மேலும் 19 பேர் இதேபோல் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக அரசின் இந்த பாசிசப் போக்கைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

பீமா கோரேகான் என்னுமிடத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது பேஷ்வாக்களின் படையை மஹர் ராணுவ வீரர்கள் தோற்கடித்த வெற்றியின் 200 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடுவதற்காக 2018 ஜனவரி 1 ஆம் தேதி தலித்துகள் இலட்சக் கணக்கில் கூடினார்கள். அவர்கள் மீது சனாதன பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். தலித்துகள் பலரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது சம்பாஜி பிடே, மிலிந்த் ஏக்போடே என்பவர்கள்தான் எனப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள்மீது வழக்கும் பதியப்பட்டது. ஆனால் பாஜக ஆதரவாளர்களான அவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் பீமா கோரேகானுக்கு அருகில் நடத்தப்பட்ட எல்கார் பரிசத் விழாவோடோ, அதன் பிறகு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தோடோ  கொஞ்சமும் சம்பந்தமில்லாத பாதிரியார் ஸ்டேன் சாமி, பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட சிந்தனையாளர்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் 20 பேரை அப்போதிருந்த மகராஷ்டிர மாநில பாஜக அரசு பொய்வழக்கில் கைது செய்து சிறைப்படுத்தியது.

அங்கு ஆட்சி மாற்றம் நடந்ததும் தமது சதி அம்பலமாகிவிடும் என அஞ்சிய பாஜக அரசு அந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுவிட்டது. பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவர். அவரை மோசமான நிலையில் சிறையில் வைத்திருந்ததால் அங்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே பாஜக அரசு அனுமதி தந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய சாவுக்கு பாஜக அரசே பொறுப்பு. அவரைப்போலவே இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மற்ற 19 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்உள்ளனர். 

பாஜக ஆட்சியில் இல்லாதபோது சனாதன் சன்ஸ்தா என்ற சனாதன பயங்கரவாத அமைப்பு நாடு முழுவதும் சிந்தனையாளர்களை செயற்பாட்டாளர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்தது. இப்போது சட்டரீதியாகவே அந்தக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதைத்தான் பாதிரியார் ஸ்டான் சாமியின் மரணம் காட்டுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாளை (08.07.2021) தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளால் ஒருங்கிணைக்கப்படும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios