Asianet News Tamil

கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகளை இயக்க கோரிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிரடி..!!

ஏற்கனவே அனுசரிக்கப்பட்ட  ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதியில் நிறைவடைய உள்ளது. தொடர்ச்சியான ஊரடங்கு, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது மக்களுக்கு கடும் சிரமத்தை அளித்துள்ளது.

Demand to run government buses with restrictions: Marxist Communist Action
Author
Chennai, First Published Aug 28, 2020, 12:12 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஊரடங்கு  தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை   கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.  

தமிழகத்தில் 5 மாதத்திற்கு மேலாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பொது முடக்கம் மூலமாக மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசும், அதை அப்படியே பின்பற்றிய மாநில அரசும் நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டிருப்பதை கையறு நிலையில் வேடிக்கை பார்ப்பதாகவே தெரி கிறது.பரிசோதனை எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 6000க்குள்ளாகவே இருப்பதும், மரணங்களின் எண்ணிக்கை 115 என்ற அளவில் இருப்பது பல விதமான கேள்விகளை எழுப்புகிறது. மேலும், மரணமடைந்த மருத்துவர்கள் எண்ணிக்கையை கூட தமிழக அரசு குறைத்து காண்பிப்பது நேர்மையற்ற செயலாகும்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் கூட இழுத்தடிப்பு  செய்யப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  மறுபுறத்தில் பொதுமுடக்கத்தின் காரணமாக அன்றாடம் உழைத்து பிழைக்கும் மக்களும் அணிதிரட்டப்படாத தொழிலாளர்களும், சுய தொழில் செய்வோரும், போக்குவரத்து வாய்ப்பு இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்வாதாரத்திற்கு வழியின்றியும் மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாயும், அதற்கடுத்து சில பகுதியினருக்கு 1000 ரூபாயும் அறிவித்த மாநில அரசு தன் முழு கடமையும் முடிந்து விட்டதாக, அதன்பிறகு கண்டு கொள்ளவே இல்லை. துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற ரேசன் பொருட்களும் கூட இந்த காலத்தில் விலையில்லாமல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு துன்பத்தில் உழலும் மக்களுக்கு நிவாரணங்களை அளிப்பதற்கும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் விலையின்றி வழங்குவதற்கும் முன்வர வேண்டும்.

 

அனைத்து குடும்பத்தினருக்கும் (வருமான வரி செலுத்தாத) அடுத்த ஆறு மாத காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூபாய் 7,500/- வழங்கிட வேண்டும். பொதுமுடக்கம் 5 மாத காலத்திற்கு மேலான நிலையில் வீட்டு வாடகை, மருத்துவ செலவுகள், உணவுபொருட்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும் மக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தினசரி வேலைக்கு செல்வோர் அதற்கான வாய்ப்பின்றி சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுக ளுடனும், கட்டுப்பாடுகளுடனும் பொது போக்குவரத்து துவங்குவது குறித்து மாநில அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஏற்கனவே அனுசரிக்கப்பட்ட  ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதியில் நிறைவடைய உள்ளது. தொடர்ச்சியான ஊரடங்கு, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது மக்களுக்கு கடும் சிரமத்தை அளித்துள்ளது. அதேசமயம் அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்படுமானால் நோய்ப்பரவல் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது. 

மேலும், கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு மாநில அரசு மறுத்து வருகிறது. எல்லாம் எமக்குத்தெரியும் என்கிற அதிகாரத்தோரணையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவதற்கோ, மக்கள் வாழ்வாதாரப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கோ இயலவில்லை. இந்த தோல்விகளுக்கு முழுமையாக மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, வேலை - வருமானத்தை பெற்றிட, ஊரடங்கை தளர்த்துவது, மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது  உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு தெளிவான முடிவுகளை மேற்கொள்ள அனைத்துக்கட்சி தலைவர்களது கூட்டத்தினை கூட்டி விவாதித்து, முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios